நெல்லையில் பஸ்சுக்காக காத்திருந்த நகைக்கடை ஊழியரை மிரட்டி பணம்- செல்போன் பறிப்பு வாலிபர் கைது


நெல்லையில் பஸ்சுக்காக காத்திருந்த நகைக்கடை ஊழியரை மிரட்டி பணம்- செல்போன் பறிப்பு வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Aug 2019 3:30 AM IST (Updated: 3 Aug 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பஸ்சுக்காக காத்திருந்த நகைக்கடை ஊழியரை மிரட்டி பணம், செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லையில் பஸ்சுக்காக காத்திருந்த நகைக்கடை ஊழியரை மிரட்டி பணம், செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நகைக்கடை ஊழியர்

திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் கரியபெருமாள். இவர் நெல்லை டவுனில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். விடுமுறையையொட்டி அவர் சொந்த ஊரான துறையூருக்கு சென்றார். நேற்று முன்தினம் ஊர் திரும்பினார்.

நெல்லை டவுனுக்கு செல்வற்காக நெல்லை சந்திப்பு அண்ணா சிலை அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் ‘அவசரமாக செல்போன் பேச வேண்டும். கொஞ்சம் உங்கள் செல்போனை தாருங்கள்‘ என்று கேட்டார்.

உடனே கரியபெருமாள் தான் வைத்து இருந்த செல்போனை கொடுத்தார். அவர் போன் பேசுவது போல் நடித்து கொண்டு, கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை நோக்கி நடந்து சென்றார். இதனால் கரியபெருமாளும் பின்னால் சென்றார்.

பணம்-செல்போன் பறிப்பு

அந்த நபர் எதுவும் கேட்காதது போல் ஹலோ..., ஹலோ என்று சொல்லிக்கொண்டே தொடர்ந்து நடந்து சென்றார். ஆற்றுப்பகுதி வந்ததும், அந்த நபர் கரியபெருமாள் சட்டையை பிடித்து பாக்கெட்டில் இருந்த ரூ.2 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் எடுத்து அவரையும் மிரட்டி விட்டு ஆற்றில் இறங்கி அடுத்த கரை வழியாக தப்பி சென்று விட்டார்.

இதுகுறித்து கரியபெருமாள், நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி, அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

விசாரணையில், நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்த கோமதி (வயது 28) என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கோமதியிடம் இருந்து ரூ.2 ஆயிரம் பணம், செல்போன் மீட்கப்பட்டது.

Next Story