வியாபாரிகள் பயன்பெறும் வகையில் எடை கற்கள், அளவைகளுக்கு அரசு முத்திரை - சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு


வியாபாரிகள் பயன்பெறும் வகையில் எடை கற்கள், அளவைகளுக்கு அரசு முத்திரை - சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 3 Aug 2019 3:45 AM IST (Updated: 3 Aug 2019 3:47 AM IST)
t-max-icont-min-icon

வியாபாரிகள் பயன் பெறும் வகையில் எடை கற்கள், அளவைகளுக்கு அதிகாரிகளே நேரில் வந்து அரசு முத்திரை பதிப்பதற்கான சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சட்டமுறை எடை அளவைத் துறை கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள சட்டமுறை எடை அளவை துறை அலுவலகத்தில் வியாபாரிகள் பயன்படுத்தும் எடை கற்கள், அளவைகள், எடையளவு எந்திரங்கள் ஆகியவற்றுக்கு முத்திரை பதித்து சான்றிதழ் வழங்கப் படுகிறது. இதற்காக உரிய தொகை செலுத்தி அரசாங்க முத்திரை பதித்து அதற்குரிய சான்றிதழை பெற்று கடைகளில் பார்வையான இடத்தில் வைக்க வேண்டும்.

புதிதாக எடை, அளவை மற்றும் எடையளவு எந்திரம், மின்னணு தராசு ஆகியவற்றை வாங்கும்போது அதில் அரசாங்க முத்திரை உள்ளதா என கவனித்து பார்த்து வாங்க வேண்டும். அரசு முத்திரை இல்லாத தராசுகள், எடை அளவைகள் பறிமுதல் செய்யப்படும்.

புதுவையில் கடைகளில் எடையளவு எந்திரங்கள் தராசு, எடை கற்கள் ஆகியவை சரியாக உள்ளனவா? உரிய காலத்தில் எடைகள் மற்றும் அளவைகள் மீது அரசு முத்திரை புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வியாபார மையங்களுக்கே நேரில் சென்று எடைகள், அளவைகள் மற்றும் எடையளவு எந்திரங்களுக்கு அதிகாரிகள் முத்திரையிடும் வகையில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:- நாளை மறுநாள் (திங்கட் கிழமை) அரியாங்குப்பம் மார்க்கெட், 6-ந் தேதி நெல்லித்தோப்பு மார்க்கெட், 8-ந் தேதி சின்ன மணிக்கூண்டு அருகே உள்ள ஜனாப் எச்.எம்.காசிம் அங்காடி, 9-ந் தேதி முதலியார்பேட்டை மார்க்கெட், 13-ந் தேதி உழவர்சந்தை (புதுவை பழைய பஸ் நிலையம்), 14-ந் தேதி லாஸ்பேட்டை மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை வணிகர்கள், வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story