2-ம் கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


2-ம் கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் - மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2019 4:36 AM IST (Updated: 3 Aug 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

2-ம் கட்ட மருத்துவ மாணவர் சேர்க்கை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது.

மதுரை,

நெல்லை மேலகரத்தை சேர்ந்த ஷாலினிசுபஸ்ரீ, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவள். பிளஸ்-2 முடித்துவிட்டு, மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதினேன். அதில் 288 மதிப்பெண் பெற்றேன். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றேன். இருப்பினும் எனக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனக்கு மருத்துவ கல்லூரியில் சீட் ஒதுக்க உத்தரவிட வேண்டும்‘ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், “முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத மருத்துவ சீட்டுகள், 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும். முதல் கட்ட கலந்தாய்வில் சாதி வாரிய ஒதுக்கீடு செய்யப்பட்டு நிரப்பப்படாத சீட்டுகள், 2-ம் கட்ட கலந்தாய்வில் அதே சாதி ஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்பப்படாது. அனைத்து வகுப்பை சேர்ந்தவர்களை கொண்டு அந்த காலியிடங்கள் நிரப்பப்படும்”என்று வாதாடினார்.

இதையடுத்து நீதிபதி, “தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகள், சுயநிதி மருத்துவ கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி, பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவக்கல்லூரிகளில் 46 சீட் என 261 மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 261 மருத்துவ சீட்டுகளும் 2-ம் கட்ட கலந்தாய்வில் அதே சாதிப்பிரிவு அடிப்படையில் நிரப்பப்படுமா? அல்லது பொதுவாக நிரப்பப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் 2-ம் கட்ட கலந்தாய்வில் சாதி ரீதியான இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் 2-ம் கட்ட கலந்தாய்வுக்கான மருத்துவ சீட் ஒதுக்கீடு விவரம், சாதி ரீதியாக திரும்ப ஒப்படைக்கப்பட்ட மருத்துவ சீட் விவரம், முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாமல் சாதிய ஒதுக்கீடு அடிப்படையில் திரும்ப வழங்கப்பட்ட மருத்துவ சீட், 2-ம் கட்ட கலந்தாய்வில் அதே சாதியை சேர்ந்தவர்களால் நிரப்பப்படுமா? என்பது தொடர்பாக வருகிற 6-ந்தேதி மருத்துவக்கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக்குழு செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

Next Story