கோசாகுளம் ஊருணியில் கருவேல மரங்கள் அகற்றும் பணி - மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆய்வு


கோசாகுளம் ஊருணியில் கருவேல மரங்கள் அகற்றும் பணி - மாநகராட்சி கமிஷனர் விசாகன் ஆய்வு
x
தினத்தந்தி 3 Aug 2019 4:54 AM IST (Updated: 3 Aug 2019 4:54 AM IST)
t-max-icont-min-icon

கோசாகுளம் ஊருணியில் ஆக்கிரமித்து வளர்ந்திருந்த கருவேல மரங்கள் அகற்றும் பணியை மாநகராட்சி கமிஷனர் விசாகன் நேற்று ஆய்வு செய்தார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன், மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் செல்லூர் 60 அடி ரோட்டில் உள்ள ராமலிங்க கோனார் தெரு, அய்யனார் கோவில் 5-வது தெரு, திருவள்ளுவர் 5-வது தெரு, அய்யனார் கோவில் 3-வது தெரு ஆகிய தெருக்களில் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுபாலங்களையும், ஜீவா தெருவில் ரூ.3.65 ஆயிரம் செலவில் புதிதாக பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய்களையும் பார்வையிட்டார்.

பின்னர் செல்லூரில் உள்ள நகர்ப்புற வீடற்ற ஏழைகள் தங்கும் இல்லத்தில் ரூ.3.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளை பார்வையிட்டார்.

மேலும் அங்கு தங்கியுள்ள முதியோர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்குள்ள கழிப்பறையினை சுத்தமாக பராமரிக்குமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின்னர் கமிஷனர் விசாகன் கோசாகுளம் ஊருணிக்கு சென்றார்.

அங்கு ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் ஊருணியில் ஆக்கிரமித்து வளர்ந்திருந்த கருவேல மரங்களை அகற்றி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இந்த பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது உதவி கமிஷனர் முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி பொறியாளர் பாஸ்கரன், சுகாதார அலுவலர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் முரளிதரன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story