ஆடிப்பூரத்தையொட்டி அத்திவரதர் தரிசனம் இன்று 6 மணி நேரம் ரத்து


ஆடிப்பூரத்தையொட்டி அத்திவரதர் தரிசனம் இன்று 6 மணி நேரம் ரத்து
x
தினத்தந்தி 3 Aug 2019 5:06 AM IST (Updated: 3 Aug 2019 5:06 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பூரத்தையொட்டி அத்திவரதர் தரிசனம் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 6 மணி நேரம் ரத்து செய்யப்படுவதாக வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்குமார் தெரிவித்தார்.

காஞ்சீபுரம்,

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். கடந்த மாதம் 31 நாட்களும் சயனகோலத்தில் காட்சியளித்தார். கடந்த 1-ந் தேதி முதல் நின்றகோலத்தில் அருள்பாலித்து வருகிறார். நேற்று பச்சை, காவி நிற பட்டாடையில் செண்பகபூ மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் 6 மணி நேரம் வரை காத்திருந்து தரிசித்தனர். முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் தனிவரிசையில் அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்குமார் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-

ஆடிப்பூரத்தையொட்டி இன்று (சனிக்கிழமை) கோவில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் சேவையில் பெருமாளும், ஆண்டாளும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அங்கு இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஆண்டாளும் பெருமாளும் கோவில் அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவிலை சென்றடைவர். இதனால் இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலான 6 மணி நேரத்திற்கு அத்திவரதர் தரிசனம் ரத்து செய்யப்படும். 8 மணிக்கு பிறகு அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக சபாநாயகர் தனபால் அத்திவரதரை தரிசித்தார். நேற்று அத்திவரதரை 1½ லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்.

Next Story