2-வது நாளாக வகுப்பை புறக்கணித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்


2-வது நாளாக வகுப்பை புறக்கணித்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2019 3:30 AM IST (Updated: 3 Aug 2019 8:53 PM IST)
t-max-icont-min-icon

‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 2-வது நாளாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அடுக்கம்பாறை, 

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வை முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக (நெக்ஸ்ட்) தேசிய அளவில் நடத்த இந்த மசோதா வழிசெய்கிறது. எனவே இந்த மசோதாவுக்கு மருத்துவத்துறையில் பெரும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

‘நெக்ஸ்ட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் டாக்டர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நெக்ஸ்ட் தேர்வை ரத்து செய்யக்கோரி நேற்று முன்தினம் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2-வது நாளாக நேற்று மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

5 வருடம் மருத்துவம் படித்த மருத்துவ மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என்ற நிபந்தனையை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவருகிறது. இதன் மூலம் ‘நெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவ மாணவர்கள் டாக்டராக பணி செய்ய அனுமதி கிடைக்கும்.

இது போன்ற, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இந்த தேசிய மருத்துவ ஆணையத்தை ஒழித்து, முன்பு இருந்த இந்திய மருத்துவ கவுன்சிலை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story