திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்தது பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்


திருச்சி அருகே ஆம்னி பஸ் தீப்பற்றி எரிந்தது பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:45 AM IST (Updated: 3 Aug 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே ஆம்னி பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சமயபுரம்,

திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் கள்ளர் தெருவை சேர்ந்த செல்வம் (வயது 44) ஓட்டினார். பஸ்சில் 45 பயணிகள் பயணம் செய்தனர். அதிகாலை நேரம் என்பதால் பயணிகளில் பலர் தூங்கிக்கொண்டிருந்தனர். சிலர் மட்டுமே விழித்திருந்தனர்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் கொணலை அருகே சென்றபோது திடீரென பஸ்சின் பின்பகுதியில் இருந்து புகை கிளம்பியது. ஏதோ கருகியது போல் வாடை வீசியதால், விழித்திருந்த பயணிகள் வாடை வந்த திசையில் பார்த்தனர். அப்போது அதிக அளவில் புகை வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சத்தம்போட்டு தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பினர்.

சத்தம் கேட்டு டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு கீழே இறங்கினார்கள். ஆனால் சிலரால் பஸ்சில் இருந்து கீழே இறங்க முடியவில்லை. அவர்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என அபயக் குரல் எழுப்பினர். இந்நிலையில் புகை வந்த பகுதியில் தீப்பற்றி எரிய தொடங்கியது.

இதற்கிடையே இதுகுறித்து ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் மெல்கியூராஜா தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பஸ்சின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்து, உள்ளே இருந்த பயணிகளை மீட்டனர். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் உள்ளிட்ட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்நிலையில் மளமளவென பஸ் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பஸ்சின் பல பகுதிகள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு திருச்சி மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். முதல்கட்ட விசாரணையில், பஸ்சில் இருந்த ஏ.சி. எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக. பஸ்சில் தீப்பிடித்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பஸ் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story