ஆடிப்பெருக்கு விழா: பவானிசாகர், கொடிவேரி அணையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்


ஆடிப்பெருக்கு விழா: பவானிசாகர், கொடிவேரி அணையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:15 AM IST (Updated: 3 Aug 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கு விழாவை யொட்டி பவானிசாகர் அணை மற்றும் கொடிவேரி அணையில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.

ஈரோடு,

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையில் ஆடிப்பெருக்கு பண்டிகை அன்று மட்டும்தான் சுற்றுலாப்பயணிகள் அணையின் மேல் பகுதியில் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி நேற்று ஆடிப்பெருக்கையொட்டி சுற்றுலாப்பயணிகள் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, சேலம், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து அணையை சுற்றிப்பார்த்தனர்.

அணையின் அருகே உள்ள பூங்காவையும் சுற்றுலாப்பயணிகள் சுற்றிப்பார்த்து ரசித்தனர். இதேபோல் அணைப்பூங்காவில் உள்ள செயற்கை நீரூற்றுகளில் படகு சவாரி செய்ததோடு, சிறுவர்-சிறுமிகள் குளித்து மகிழ்ந்தனர். மேலும் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணையில் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகஅளவில் இருக்கும். தற்போது ஆடிப்பெருக்கை முன்னிட்டு பவானி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

நேற்று ஆடிப்பெருக்கு என்பதால் ஈரோடு மட்டுமின்றி கோவை, சேலம், திருப்பூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலாப்பயணிகள் வந்தனர். மேலும், கர்நாடகா, பெங்களூரு, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர்.

சுற்றுலாப்பயணிகள் அனைவரும் அணையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் கொண்டு வந்த உணவுகளை கொடிவேரி அணைப்பூங்காவில் உள்ள புல் தரையில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர். இதேபோல் அணைப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மீன் வறுவல்களை வாங்கி ருசித்தனர். மேலும் குழந்தைகள் பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

Next Story