இந்திய பொருளாதாரத்தை காப்பாற்ற தொழில்களை பாதுகாக்க வேண்டும் - ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
இந்திய பொருளாதாரத்தை காப்பாற்ற தொழில்களை பாதுகாக்க வேண்டும் என்று ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.
அறச்சலூர்,
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ஓடாநிலையில் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தீரன் சின்னமலையின் நினைவு தினமான ஆடி மாதம் 18–ந் தேதி அரசு விழாவாக எடுத்து நடத்தப்படுகிறது. ஆனால் அவருடைய மணிமண்டபத்தில் முழு உருவ சிலை இல்லை என்பது வருத்தமளிக்கிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு மணிமண்டபத்தில் தீரன் சின்னமலைக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அப்போது சின்னமலையின் சிலை சுவருடன் பொருத்தப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு சிலை வைப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் இன்று வரை முழு உருவ சிலை வைக்கப் படவில்லை. அடுத்த ஆண்டு சிலை வைக்கப்படுவதாக மீண்டும் வாக்குறுதி கொடுத்து உள்ளார்கள். அதை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க குளம், குட்டைகளை தூர்வாரி தண்ணீரை தேக்கி வைப்பது தவிர வேறு வழி இல்லை. பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் இந்த பணியில் இறங்கியுள்ளனர். அதற்கு அரசின் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. ஆளும் கட்சியினரின் எதிர்பார்ப்புடன் கூடிய தொல்லை இருப்பதால் பொதுமக்கள் சமூக பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய பொருளாதாரம் நன்றாக இருப்பதாக மத்திய அரசு சொல்லி வருகிறது. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை. அப்படி இருக்கும் வகையில் எப்படி பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய முடியும்.
சமீபத்தில் வெளியான சர்வதேச அளவிலான ஆய்வு அறிக்கையில் இந்திய பொருளாதாரம் கீழ் நோக்கி செல்வதாக கூறப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய பொருளாதாரத்தை காப்பாற்ற தொழில்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
இவ்வாறு ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.