எடியூரப்பாவுடன் சுதாகர் திடீர் சந்திப்பு அரசியலமைப்பை ரமேஷ்குமார் அவமதித்துவிட்டார் என குற்றச்சாட்டு


எடியூரப்பாவுடன் சுதாகர் திடீர் சந்திப்பு அரசியலமைப்பை ரமேஷ்குமார் அவமதித்துவிட்டார் என குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Aug 2019 11:55 PM IST (Updated: 4 Aug 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான சுதாகர் திடீரென்று சந்தித்து பேசினார்.

பெங்களூரு, 

பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பாவை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான சுதாகர் திடீரென்று சந்தித்து பேசினார். மேலும் அரசியலமைப்பை முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் அவமதித்து விட்டார் என அவர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

எடியூரப்பாவுடன் சந்திப்பு

பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரி எடியூரப்பாவின் வீட்டுக்கு நேற்று காலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான சுதாகர் சென்றார். அங்கு அவர், எடியூரப்பாவை சந்தித்து பேசினார். அரை மணிநேரத்திற்கும் மேலாக 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். குறிப்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பிறகு பா.ஜனதாவில் சேருவது, மந்திரி பதவி குறித்து எடியூரப்பாவுடன் சுதாகர் பேசியதாக தெரிகிறது.

பின்னர் எடியூரப்பா வீட்டில் இருந்து வெளியே வந்த சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதி ஒதுக்குவதாக உறுதி

முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றபோது, அந்த விழாவில் கலந்துகொள்ள என்னால் முடியவில்லை. இதனால் அவரது வீட்டுக்கு வந்து எடியூரப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். இந்த சந்திப்பின் போது அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. எனது தொகுதியான சிக்கபள்ளாப்பூரில் வளர்ச்சி பணிகள் குறித்து எடியூரப்பாவுடன் பேசினேன். சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியை ஒதுக்கும்படி கேட்டுக் கொண்டேன். முதல்-மந்திரி எடியூரப்பாவும் கூடிய விரைவில் நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்தார்.

சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த கூட்டணி ஆட்சியில் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்காக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை. அதனால் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கும்படியும் எடியூரப்பாவிடம் கேட்டுக் கொண்டேன்.

அரசியலமைப்பை அவமதித்து விட்டார்

எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த விவகாரத்தில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களிடம் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்து எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்திருப்பதன் மூலம் அரசியலமைப்பை ரமேஷ் குமார் அவமதித்து விட்டார். நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படவில்லை. சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் நடந்த எல்லா தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அவர்களை வெற்றி பெற செய்துள்ளேன்.

அப்படி இருக்கையில் என்னை கட்சியில் இருந்து எதற்காக நீக்கினார்கள்? என்று தெரியவில்லை. கோலார் நாடாளுமன்ற தொகுதியில் 7 முறை வெற்றி பெற்றிருந்த கே.எச்.முனியப்பாவை தோல்வி அடைய செய்ததில் ரமேஷ்குமாருக்கும் முக்கிய பங்கு உண்டு. அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

கோர்ட்டில் நியாயம் கிடைக்கும்

சிக்கபள்ளாப்பூர் தொகுதி வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில், எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள் ளேன். எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது சிக்கபள்ளாப்பூர் தொகுதி மக்களின் கையில் உள்ளது. அந்த தொகுதியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை மக்கள் வெற்றி பெற செய்வார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வந்த பின்பு தொகுதி மக்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுப்பேன். பா.ஜனதாவில் சேருவது பற்றியோ, மந்திரிசபையில் இடம் கிடைக்குமா? என்பது பற்றியோ எனக்கு தெரியாது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

Next Story