சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு விமான நிலையத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு டுவிட்டர் பதிவில் தகவல்


சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு விமான நிலையத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு டுவிட்டர் பதிவில் தகவல்
x
தினத்தந்தி 4 Aug 2019 3:30 AM IST (Updated: 4 Aug 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூரு விமான நிலையத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்று பெங்களூரு விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

சுதந்திர தினத்தையொட்டி, பெங்களூரு விமான நிலையத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது என்று பெங்களூரு விமான நிலையத்தின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு விமான நிலையம்

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினமும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விமானங்கள் சென்று வருகின்றன. கடந்த நிதி ஆண்டில் 33.3 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையம் மூலம் விமானங்களில் பயணித்துள்ளனர். புல்வாமா தாக்குதலை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங் களிலும் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்ளும்படி மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.

இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சுதந்திர தினம் நெருங்குவதால் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெங்களூரு விமான நிலையத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் வரும் பயணிகளிடம் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் விமான நிலையத்தில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் உள்ளது.

உச்சக்கட்ட பாதுகாப்பு

சோதனையின் ஒருபகுதியாக பயணிகளின் ‘ஷூ‘, ‘பெல்ட்‘ ஆகியவற்றை கழற்றியும் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால் கோபம் அடைந்த பயணிகள் பலர் சோதனை குறித்த படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பெங்களூரு விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

அந்த பதிவில், ‘பெங்களூரு விமான நிலையத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கூடுதல் நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியது அவசியம். பயணிகளின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதன்படி பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுகொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் சிரமத்துக்கு மன்னித்து கொள்ளவும்‘ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த டுவிட்டர் பதிவு மூலம் பெங்களூரு விமான நிலையத்துக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது. இதேபோல் மங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ரெயில், பஸ் நிலையங்களில்...

மேலும், கர்நாடகத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பண்டிகை நாட்கள் உள்பட முக்கிய தினங்களில் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவது வழக்கமானது தான். அதேபோல் சுதந்திர தினத்தையொட்டி பாதுகாப்பு பணியில் அதிக போலீசார் ஈடுபட்டு உள்ளனர்‘ என்றார். இதுதவிர பஸ் நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Next Story