மனைவி காதலனுடன் சென்றதால் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை


மனைவி காதலனுடன் சென்றதால் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2019 3:45 AM IST (Updated: 4 Aug 2019 12:04 AM IST)
t-max-icont-min-icon

மனைவி காதலனுடன் சென்றதால் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

நாகூர்,

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த அருவிழமங்கலம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தங்கராசு. இவருடைய மகன் பாக்கியராஜ்(வயது35). விவசாயி. இவருக்கும், திருவாரூர் மாவட்டம் நாககுடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா(19) என்பவருக்கும் கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு முன்பே கவுசல்யாவுக்கும், ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்து உள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் பாக்கியராஜூக்கு கவுசல்யாவை திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் இந்த திருமணத்தில் கவுசல்யாவுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. தனது விருப்பத்தை அவர் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். ஆனால் இந்த காதல் திருமணத்தை அவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பாக்கியராஜூடன் திருமணம் செய்து வைத்தனர்.

இந்த நிலையில் ஆடி மாதத்தையொட்டி கவுசல்யாவை அவரது பெற்றோர் தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றனர். தாய் வீட்டிற்கு சென்ற கவுல்சயா தனது காதலனை சந்தித்து பேசி உள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து இருவரும் தங்களது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடி விட்டனர். தனது மனைவி காதலனுடன் சென்றதை அறிந்த பாக்கியராஜ் மிகுந்த அவமானமும், வேதனையும் அடைந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து பாக்கியராஜ் குடித்து விட்டு மயங்கி விழுந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான 40-வது நாளில் மனைவி காதலனுடன் சென்றதால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story