ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கிருஷ்ணகிரி அணையில் குவிந்த பொதுமக்கள்


ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கிருஷ்ணகிரி அணையில் குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:00 AM IST (Updated: 4 Aug 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கிருஷ்ணகிரி அணையில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆடி மாதம் தொடங்கியது முதல் அம்மன் கோவில்களில் விழா நடந்து வருகிறது. ஆடி மாதத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஆடிப்பெருக்கு ஒன்றாகும். இந்த நாளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதுடன், நீர் நிலைகளில் மக்கள் புனித நீராடுவதும், புதுமண தம்பதிகள் தாலி மாற்றிக் கொள்வது வழக்கமாகும்.

அதன்படி, கிருஷ்ணகிரி அணை, பாரூர் அருகே உள்ள மஞ்சமேடு, போச்சம்பள்ளி அருகே உள்ள வலசவுண்டனூர், வேப்பனப்பள்ளி அருகே உள்ள தீர்த்தம், ஊத்தங்கரை அருகே உள்ள அனுமன்தீர்த்தம் ஆகிய இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி அணைக்கு கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். அவர்கள் அணை அருகில் உள்ள மார்க்கண்டேஸ்வரர் கோவில் அருகில் உள்ள நந்தியின் வாயில் இருந்து வெளியேறிய தண்ணீரிலும், ஆற்றிலும் குளித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதே போல அங்கு பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பெண் பக்தர்கள் வரிசையில் நின்று கைகளில் சாட்டையடி வாங்கி கொண்டனர். விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அணை பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கிருஷ்ணகிரி நகரில் இருந்து அணைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்பட்டன.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கிருஷ்ணகிரி அணை அருகே உள்ள செல்லியம்மன் கோவில், அவதானப்பட்டி மாரியம்மன் கோவில், கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில், ராசுவீதி துளுக்காணி அம்மன் கோவில் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story