மந்திரிசபை விரிவாக்கம் குறித்து தலைவர்களுடன் ஆலோசனை: எடியூரப்பா நாளை டெல்லி பயணம் 6-ந் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்


மந்திரிசபை விரிவாக்கம் குறித்து தலைவர்களுடன் ஆலோசனை: எடியூரப்பா நாளை டெல்லி பயணம் 6-ந் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:00 AM IST (Updated: 4 Aug 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு செல்கிறார்.

பெங்களூரு, 

மந்திரிசபை விரிவாக்கம் குறித்து கட்சி தலைவர்களுடன் ஆலோசிக்க முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு செல்கிறார். அங்கு வருகிற 6-ந் தேதி பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேசுகிறார்.

குழப்பத்தில் எடியூரப்பா

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி கவிழ்ந்தது. அதன்பிறகு, கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி அமைந்தது. பா.ஜனதா ஆட்சி அமைந்து ஒரு வாரம் ஆகியும் இன்னும் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. கூட்டணி ஆட்சி கவிழ்வதற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள 17 பேரும் தங்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என்று எடியூரப்பாவை வலியுறுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்கள், 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்று எடியூரப்பா குழப்பத்தில் உள்ளார். அதே நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 17 எம்.எல்.ஏ.க்களின் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருவதால், அவர்களுக்கு உடனடியாக மந்திரி பதவி வழங்க முடியாத நிலை உருவாகி இருக்கிறது.

3 நாள் டெல்லி பயணம்

அத்துடன் யார், யாருக்கு மந்திரி பதவியை வழங்குவது என்பது குறித்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தான் முடிவு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபோன்ற காரணங்களால் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம், யாருக்கெல்லாம் மந்திரி பதவி வழங்குவது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவில் சேர்ப்பது, அவர்களுக்கு மந்திரி பதவி வழங்குவது குறித்து கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக முதல்-மந்திரி எடியூரப்பா 3 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி செல்கிறார்.

அதாவது நாளை (திங்கட்கிழமை) இரவு 7.40 மணியளவில் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எடியூரப்பா டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். அன்றைய தினம் இரவு 10.20 மணிக்கு டெல்லிக்கு செல்லும் அவர், அங்குள்ள கர்நாடக பவனில் இரவு தங்கி ஓய்வெடுக்க உள்ளார்.

பிரதமருடன் சந்திப்பு

மறுநாள் (6-ந் தேதி) காலை 9.45 மணியளவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை எடியூரப்பா சந்தித்து பேசுகிறார். அதன்பிறகு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து அவர் பேச உள்ளார். இதையடுத்து, மத்திய மந்திரிகளை சந்தித்து கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிதி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து அவர் பேசுகிறார். அன்றைய தினம் இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்துகிறார். மேலும் 7-ந் தேதியும் டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து எடியூரப்பா பேசுகிறார்.

அதே நேரத்தில் மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக 6-ந் தேதியே பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து எடியூரப்பா பேச உள்ளார். அப்போது யார்-யாருக்கு மந்திரி பதவி வழங்குவது என்பது குறித்து 2 பேரும் ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது எந்த முடிவும் எடுக்க முடியாத பட்சத்தில் 7-ந் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தி முதற்கட்டமாக எத்தனை மந்திரிகள் பதவி ஏற்கலாம் என்பது குறித்து அமித்ஷாவும், எடியூரப்பாவும் முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

அமித்ஷாவை சந்தித்து...

முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின்பு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு செல்கிறேன். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேச உள்ளேன். வருகிற 6-ந் தேதி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளேன். இதில், கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். மத்திய அரசால் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்துவது, அதற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெறுவது குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசிக்க உள்ளேன்.

கடவுள் அருளால் நான் மீண்டும் முதல்-மந்திரியாகி உள்ளேன். அதனால் நான் பதவியில் இருக்கும் வரை மாநில வளர்ச்சிக்காகவும், மக்கள் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன். முதல்-மந்திரியாக பதவி ஏற்றதும் நெசவாளர்களின் கடன் ரூ.100 கோடியை தள்ளுபடி செய்துள்ளேன். பிரதம மந்திரியின் கிஷான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.6 ஆயிரத்துடன் 2 தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.4 ஆயிரம் வழங்கவும் முடிவு எடுத்துள்ளேன்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story