காவிரி டெல்டா பகுதிகளில் செயற்கை மழை முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
காவிரி டெல்டா பகுதிகளில் செயற்கை மழை பெய்ய வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
காவிரி டெல்டா பகுதிகளில் செயற்கை மழை பெய்ய வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
உறுப்பினர் சேர்க்கும் முகாம்
கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியில் புதிதாக 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்கப்படுத்தும் வகையில் பெங்களூருவில் 2 நாட்கள் உறுப்பினர் சேர்க்கை முகாம் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இந்த முகாமை நேற்று காலையில் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மாநில தலைவருமான எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், பா.ஜனதா கட்சியில் உறுப்பினராக சேருவதற்கான படிவத்தை இளைஞர்கள், இளம்பெண்களிடம் வழங்கினார். அதைத்தொடர்ந்து, முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
50 லட்சம் பேரை...
பா.ஜனதா கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், நகரசபை கவுன்சிலர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் தாலுகா பஞ்சாயத்து தலைவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது பகுதியில் வசிப்பவர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் ஒரு எம்.எல்.ஏ. 50 ஆயிரம் நபர்களை பா.ஜனதா கட்சியின் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அதுபோல, பூத் கமிட்டி மட்டத்தில் 100 பேரை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். கட்சியை வளர்க்க ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டியது அவசியமானதாகும்.
இதற்காக பெங்களூருவில் இன்று(அதாவது நேற்று) மற்றும் நாளை(இன்று) 2 நாட்கள் முகாம் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் வருகிற 10 மற்றும் 11-ந் தேதிகளில் முகாம் நடைபெற உள்ளது. 50 லட்சம் பேரை உறுப்பினராக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 12 லட்சம் பேர் உறுப்பினர்களாகி உள்ளனர். கட்சியை பலப்படுத்தியதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் மண்டியாவையும் (பா.ஜனதா ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா அம்பரீஷ் வெற்றி பெற்றார்) சேர்த்து பா.ஜனதாவால் 26 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்தது. பெங்களூரு மாநகராட்சியில் அதிகாரத்தை இழந்து எதிர்க்கட்சியாக இருக்கிறோம். நாம் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்றால், உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
பின்னர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
செயற்கை மழை
மாநிலத்தில் பெலகாவி, பாகல்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் ஆகஸ்டு மாதம் பிறந்துள்ள நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு மாநிலம் முழுவதும் மழை பெய்யவில்லை. பல தாலுகாக்களில் வறட்சி நிலவுகிறது. மழையால் பாதிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். மக்களுக்கும், கால்நடைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா பகுதிகளிலும் போதிய மழை பெய்யவில்லை. அதனால் அங்கு செயற்கை மழை பெய்ய வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஏற்கனவே ஐதராபாத்-கர்நாடகா, மும்பை-கர்நாடகா, மத்திய கர்நாடக பகுதிகளில் செயற்கை மழை பெய்ய வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனிவரும் நாட்களில் அங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடவுள் அருளால் மாநிலத்தில் நல்ல மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story