ஆடிப்பெருக்கையொட்டி அமராவதி அணைப்பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சவாரியின்போது செல்பி எடுத்து மகிழ்ந்தனர்


ஆடிப்பெருக்கையொட்டி அமராவதி அணைப்பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்; படகு சவாரியின்போது செல்பி எடுத்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:15 AM IST (Updated: 4 Aug 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி அமராவதி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் படகு சவாரியின்போது செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

தளி,

உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் அருகில் பூங்கா, படகு இல்லம், ராக்கார்டன் மற்றும் முதலைப்பண்ணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

அதை பார்த்து ரசிக்கவும், அணைப்பகுதியில் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழவும், தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதி அணைக்கு வருகை தருகின்றனர். வறட்சியின் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அணைப்பகுதி ராக்கார்டன் பூங்கா உள்ளிட்டவை பசுமையை இழந்து காணப்பட்டன. அத்துடன் அணையிலும் நீர் இருப்பும் குறைந்து விட்டது. இதனால் அணைப்பகுதியை பார்வையிடுவதற்காக வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது.

இந்த நிலையில் கடந்த மாதம் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் அமராவதி அணையின் நீராதாரமாக விளங்கும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமராவதி அணைக்கு சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் நேற்று ஆடிப்பெருக்கு திருவிழா என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அமராவதி அணைக்கு வருகை தந்தனர். இதனால் அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பின்னர் அணையின் அடிவாரப்பகுதி முதலைப்பண்ணை, பூங்கா உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்ததுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து அணைப்பகுதிக்குள் சென்ற சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு படகு சவாரி செய்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதனால் அணைப்பகுதி முதலைப்பண்ணை, படகுஇல்லம் பூங்கா மற்றும் ராக்கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் ஆடிப்பண்டிகையை முன்னிட்டு உடுமலையை அடுத்த திருமூர்த்திமலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story