மதனகோபாலசுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கு விழா காவிரி தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை வந்த இளைஞர்கள்


மதனகோபாலசுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கு விழா காவிரி தீர்த்த குடங்களுடன் பாதயாத்திரை வந்த இளைஞர்கள்
x
தினத்தந்தி 3 Aug 2019 10:30 PM GMT (Updated: 3 Aug 2019 7:28 PM GMT)

மதனகோபாலசுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி இளைஞர்கள் காவிரி தீர்த்தத்தை குடங்களில் நிரப்பி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து பாதயாத்திரையாக எடுத்துவந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.

அரியலூர்,

பெரம்பலூரில் பஞ்ச பாண்டவருக்கு தனிசன்னதி உள்ள மரகத வல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் 21-வது ஆண்டு ஆடி பெருக்கு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பெரம்பலூர் நகரைச் சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருச்சி ஸ்ரீரங்கத்திற்கு சென்று காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தத்தை குடங்களில் சுமந்து குழு, குழுவாக பாதயாத்திரையாக பெரம்பலூர் வந்தனர். சிறுவாச்சூரில் மதுரகாளி அம்மனை தரிசனம் செய்து சற்று ஓய்வுக்கு பிறகு நேற்று மாலை பெரம்பலூருக்கு வந்த தீர்த்த குடங்களுக்கு மதனகோபாலசுவாமி பக்தர்கள் சார்பிலும் ஆடிப்பெருக்குவிழா கமிட்டி சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆஞ்சநேயர் உருவ சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு ஆஞ்சநேயர் சிலையுடன் காவிரி தீர்த்த ஊர்வலம் வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மதனகோபால சுவாமி கோவில் நிர்வாக அதிகாரி மணி, ஆடிப்பெருக்குவிழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கீற்றுக்கடை குமார், வெள்ளந்தாங்கி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் தர்மராஜன், வர்த்தகர் சங்க தலைவர் பழனியாண்டிபிள்ளை, மதனகோபாலசுவாமி கோவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், விழாக்கமிட்டியை சேர்ந்த பூக்கடை சரவணன், கோவிந்தசாமி மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கம்பம் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

இந்த ஊர்வலம் அதிர்வேட்டுகள், மேளதாளம் முழங்க தெற்குத்தெரு, கடைவீதி, தேரடி வழியாக மதனகோபாலசுவாமி கோவிலுக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் பாதயாத்திரை வந்த இளைஞர்கள் கோவிந்தா, கோபாலா என்ற பக்தி கோஷத்துடன் வந்து, மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள கம்பம் ஆஞ்சநேயருக்கு காவிரி தீர்த்த அபிஷேகம் நடத்தினர். இதனை தொடர்ந்து நேற்று இரவு கம்பம் ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவில் பணியாளர்கள் மற்றும் பெருமாள் பக்தர்கள் செய்திருந்தனர்.

Next Story