கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் “புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது” துணைவேந்தர் பிச்சுமணி பேச்சு
கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி கூறினார்.
நெல்லை,
கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி கூறினார்.
கருத்தரங்கம்
தென் தமிழ்நாடு வித்யா பாரதி என்ற அமைப்பின் சார்பில் “தேசிய கல்வி கொள்கை தமிழகத்தின் பார்வை” என்ற தலைப்பில் பாளையங்கோட்டையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது மாணவர்களுக்கு கல்வி பாட திட்டங்களில் திட்டமிடல், புதுமை போன்ற விசயங்கள் இடம்பெற வில்லை. பாடப்புத்தகங்களை மட்டுமே மாணவ-மாணவிகள் படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
வரும் ஆண்டுகளில் புதிய பாடத்திட்டத்துக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். புதிய கல்வி கொள்கையில் அடிப்படை கல்வி, முன்பருவ கல்வி, நடுத்தர கல்வி, உயர் கல்வி என நான்கு பிரிவுகள் உள்ளன. உயர் கல்வியில் பல்வேறு பாடப்பிரிவு உள்ளன.
தற்போது பட்டப்படிப்பு தனியாகவும், பி.எட். கல்வி தனியாகவும் கற்று தரப்படுகிறது. ஆனால் புதிய கல்வி கொள்கையில் இந்த படிப்புகள் நான்கு ஆண்டுகளில் ஒருங்கிணைந்து கற்று தரப்படுகிறது. கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய கல்வி கொள்கைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பல்வேறு அம்சங்கள்
உயர் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் புதிய கல்வி கொள்கையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது பல்கலைக்கழகங்கள் மூலம் மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற பட்டப்படிப்புகள் கற்று கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய கல்வி கொள்கையில் அவை அனைத்தும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தனித்துறைகள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளன. மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்கும் போது தொழிற்திறனை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கத்தில் பாளையங்கோட்டை சாரதா மகளிர் கல்லூரி செயலாளர் யதீஸ்வரி சரவணபவ பிரியா, முதல்வர் மலர்விழி, ஆரால்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜரத்தினம், வித்யா பாரதி அமைப்பின் தென் தமிழ்நாடு தலைவர் குமாரசுவாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story