வெவ்வேறு சம்பவங்களில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் பாலிடெக்னிக் மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 4 Aug 2019 3:00 AM IST (Updated: 4 Aug 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

எட்டயபுரம், 

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்

ஆழ்வார்திருநகரி அருகே தேமாங்குளம் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். விவசாயி. இவருடைய மனைவி பார்வதி. இவர் செய்துங்கநல்லூர் அருகே தூதுகுழியில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மனோகரன் (வயது 20) என்ற மகன் மற்றும் 2 மகள்கள்.

மனோகரன், நாசரேத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தன்னுடைய தாயாருக்கு உதவியாக தோட்டத்துக்கு சென்று வேலை செய்வது வழக்கம். இவர் கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் மனமுடைந்த மனோகரன் சம்பவத்தன்று தூதுகுழியில் தன்னுடைய தாயார் வேலை செய்த தோட்டத்துக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் மனோகரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

எட்டயபுரம் அருகே மெட்டில்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பூவலிங்கம் (53). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பூவலிங்கத்துக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அவர் அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனை மனைவி கண்டித்தார். இதனால் மனமுடைந்த பூவலிங்கம் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவருக்கு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பூவலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story