சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் திரளான பக்தர்கள் தரிசனம்
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்றம்
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் ஆடித்தபசு திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்க கொடிமரத்தில் காலை 5.45 மணிக்கு மந்திரங்கள் முழங்க வெண்பட்டு கொடியேற்றப்பட்டது. அதை தொடர்ந்து தர்ப்பை புற்கள், பட்டு வஸ்திரங்கள், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தேன், பஞ்சாமிர்தம், இளநீர் உள்பட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆடித்தபசு காட்சி
திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி- அம்பாள் வீதி உலா, சிறப்பு பூஜைகள் நடைபெறும். 2-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு கோமதி அம்பாள் சிவலிங்க தரிசன அலங்காரத்தில் வீதி உலா, இரவு 10 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் கோமதி அம்பாள் வீதி உலா நடக்கிறது. 9-ம் திருநாளான 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
தொடர்ந்து 13-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆடித்தபசு திருவிழா நடக்கிறது. அதனை முன்னிட்டு மாலை 6 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், நள்ளிரவு 12 மணிக்கு சிவபெருமான் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடு களை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story