கறவை பசு-வெள்ளாடு வழங்க பயனாளிகள் தேர்வுக்காக சிறப்பு கிராம சபை கூட்டம்


கறவை பசு-வெள்ளாடு வழங்க பயனாளிகள் தேர்வுக்காக சிறப்பு கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 4 Aug 2019 4:15 AM IST (Updated: 4 Aug 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சிகளில் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கவும், 18 ஊராட்சிகளில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கவும் பயனாளிகள் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது.

கரூர்,

கால்நடைபராமரிப்புத் துறையின் சார்பில் கரூர் மாவட்டத்தில் 8 ஊராட்சிகளில் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கவும், 18 ஊராட்சிகளில் விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கவும் பயனாளிகள் தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது. அந்த வகையில் பயனாளிகள் தேர்வு மற்றும் மழைநீர் சேமிப்பு மற்றும் குடிநீர் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தன. இதில், கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நன்னியூர் ஊராட்சி சிந்தாயூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் பேசும்போது, விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெறவிரும்பும் நபர்களுக்கு விவசாய நிலம் இருத்தல் கூடாது. சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும். 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், தற்சமயம் கால்நடைகள் ஏதும் இருத்தல் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் எவரும் மத்திய மாநில அரசுப்பணியில் இருத்தல் கூடாது. வழங்கப்படவுள்ள கறவை பசுக்களை நான்கு ஆண்டுகளுக்கு பராமரித்தல் வேண்டும் மற்றும் வழங்கப்படவுள்ள ஆடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு பராமரித்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்களாக தேர்வு செய்யப்படுவர். கிராம அளவிலான தேர்வுக் குழுவினரால் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிற 15-ந்தேதி அன்று நடத்தப் படும் சிறப்பு கிராம சபைக்கூட்டத்தில் பயனாளிகள் பட்டியல் பொதுமக்களின் முன்னிலையில் ஒப்புதல் பெறப்படும். எனவே, பொதுமக்கள் மேற்கூறிய விதிகளுக்குட்பட்டு தங்களது விண்ணப்பங்களை ஊராட்சி மன்ற செயலாளர் களிடம் வழங்கலாம் என்றார். கூட்டத்தில், கால்நடைபராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், உதவி இயக்குனர் முரளிதரன், தாசில்தார் ரவிக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story