குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Aug 2019 3:45 AM IST (Updated: 4 Aug 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.வ. மேல்நிலைப்பள்ளி, சி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் நடந்தது. தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று தூத்துக்குடி குரூஸ் பர்னாந்த் சிலை முன்பு முடிவடைந்தது.

அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பிரச்சினை ஏற்பட்டால்...

குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பெற்றோர்கள் குழந்தைகளை தனியாக விடக்கூடாது. தெரியாத நபர்களுடன் வெளியே அனுப்பக்கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளின் சமீபத்திய புகைப்படம், குழந்தையின் உயரம், உடை, அங்க அடையாளம், தழும்பு, கண்ணின் நிறம் மற்றும் அணிந்திருந்த உடையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தை குறித்த நேரத்திற்கு வராவிட்டால் உடனே குழந்தையை தேட வேண்டும், காணாமல் போனால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

தொலைபேசி எண்

குழந்தைகள் வெளிநபர்கள் தரும் தின்பண்டங்களை சாப்பிடக்கூடாது. கூட்டமாக விளையாட வேண்டும். தனக்கு ஆபத்து வரும் என்றால் சத்தமாக கத்த வேண்டும். குழந்தைகள் தங்களது பெற்றோரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், சைல்டு லைன் எண் 1098 ஆகியவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு வராமல் இருந்தால் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். குழந்தைகளை பள்ளி நேரங்களில் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜீன்குமார் (தென்பாகம்), ஜெயப்பிரகாஷ் (மத்தியபாகம்), பார்த்திபன் (வடபாகம்), சிவசெந்தில்குமார் (முத்தையாபுரம்), கிருஷ்ணகுமார் (தென்பாகம் குற்றப்பிரிவு), சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, சங்கர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story