குற்ற சம்பவங்களை தடுக்க ‘அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துங்கள்’
குற்ற சம்பவங்களை தடுக்க அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை மணி பொருத்துங்கள் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் அறிவுரை கூறியுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் ஸ்ரீராம் நகர், கவுதம் நகர், அவ்வைபூமி நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் வேணு, பொருளாளர் கோபி, இணை செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் கலந்து கொண்டு குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
தற்போது குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மற்ற நாடுகளைப்போல் நமது நாட்டில் குற்ற சம்பவங்களுக்கு கடுமையான தண்டனை கிடையாது. இதை பயன்படுத்திக்கொண்டு குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இன்றைக்கு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பிடிபடுபவர்களில் 50 சதவீதம் பேர் மாணவர்களாக உள்ளனர். முன்பெல்லாம் குற்ற சம்பவங்களை கண்டுபிடிப்பதுதான் போலீசாரின் பிரதான பணியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு மக்களின் அன்றாட பல்வேறு பிரச்சினைகளையும் போலீசார் கவனிக்க வேண்டியுள்ளதால் குற்ற சம்பவங்களை தடுக்க முழு நேரமும் போலீசாரால் இயலமுடியவில்லை.
இன்றைக்கு லாரியை கூட சாதாரணமாக திருடி விடுகின்றனர். ஆள் இல்லாத வீடுகளில் திருடுவது மட்டுமின்றி, சில சமயங்களில் ஆட்கள் இருக்கும் வீடுகளுக்குள்ளும் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியும், தாக்கியும் திருடுகின்றனர். இதுதவிர தனியாக நடந்து செல்லும் பெண்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து நகையை பறித்துச்செல்கின்றனர். இதனை தடுக்க பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.
குற்றத்தை தடுப்பது எப்படி என்று பொதுமக்கள் அனைவரும் யோசிக்க வேண்டும். அதாவது அனைத்து வீடுகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தினால் குற்ற சம்பவத்தை தடுக்கலாம். அதேபோல் தற்காப்பு நடவடிக்கையாக எச்சரிக்கை மணியையும் பொருத்தலாம். அதேபோல் குடியிருப்பு பகுதியின் முக்கிய இடங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், விவேகானந்தன் மற்றும் போலீசாரும், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story