கூடலூர்-நம்பியார்குன்னு வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்சை முறையாக பராமரிக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை
கூடலூர்-நம்பியார்குன்னு வழித்தடத்தில் இயங்கும் அரசு பஸ்சை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நம்பியார்குன்னு, அம்பலமூலா, நரிக்கொல்லி, அய்யன்கொல்லி, மழவன்சேரம்பாடி, கொளப்பள்ளி, நெல்லியாளம், சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக கூடலூருக்கு வந்து செல்கின்றனர். மேலும் அங்கிருந்து கூடலூர் அரசு கல்லூரிக்கும் தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் பஸ்களில் வருகின்றனர்.
இந்த நிலையில் நம்பியார்குன்னுவில் இருந்து காலை 7 மணி, 11.30 மணி மற்றும் மாலை 6 மணிக்கு என கூடலூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. கடைசியாக அந்த அரசு பஸ் கூடலூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு நம்பியார்குன்னுக்கு வந்தடைகிறது. அங்கு நிறுத்தப்படும் அரசு பஸ் மறுநாள் காலை 7 மணிக்கு கூடலூருக்கு வழக்கம்போல் இயக்கப்படுகிறது.
இந்த அரசு பஸ் நம்பியார்குன்னுவில் இருந்து அய்யன்கொல்லி, கொளப்பள்ளி வழியாக செல்வதால் ஏராளமான மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் அந்த அரசு பஸ்சில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். ஆனால் அரசு பஸ் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் சில சமயங்களில் நடுவழியில் பழுதாகி நின்று, பயணிகளை அவதிக்கு உள்ளாக்கி வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அரசு பஸ்சின் முன்பக்க கதவு உடைந்து விழுந்து 2 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதனால் அந்த அரசு பஸ்சை முறையாக பராமரிக்க வேண்டும், இல்லையென்றால் வேறு அரசு பஸ்சை கூடலூர்-நம்பியார்குன்னு வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த அரசு பஸ் பராமரிக்கப்பட்டு, ஓரளவுக்கு நல்ல நிலையில் இயக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் மீண்டும் நடுவழியில் பழுதடைந்து நிற்கும் அவல நிலைக்கு சென்றுவிட்டது. இதனால் மாணவ-மாணவிகள் உள்பட பயணிகள் அனைவரும் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கூடலூர்-நம்பியார்குன்னு வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்சை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story