வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா, 11 கணினிகள் திருட்டு


வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா, 11 கணினிகள் திருட்டு
x
தினத்தந்தி 5 Aug 2019 4:45 AM IST (Updated: 4 Aug 2019 10:01 PM IST)
t-max-icont-min-icon

குடியாத்தத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் கண்காணிப்பு கேமரா, 11 கணினிகளை மர்ம நபர்கள் திருடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குடியாத்தம், 

குடியாத்தம் - காட்பாடி ரோடு அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரிக்கு எதிரே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஒரே வளாகத்தில் அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வேலூர் நாடாளுமன்ற தேர்தலையொட்டி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட 29, 30 மற்றும் 32 ஆகிய வாக்குச்சாவடி மையங்கள் பள்ளி வகுப்பறையில் அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குப்பதிவை கண்காணிக்க 2 வகுப்பறைகளில் தேர்தல் ஆணையத்தின் மூலம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று காலை கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி, உதவியாளர் பழனிவேல் ஆகியோர் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட வந்துள்ளனர்.

அப்போது 5 வகுப்பறைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறைக்கு சென்று பார்த்தபோது ஒரு வகுப்பறையில் இருந்த கண்காணிப்பு கேமரா திருடப் பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும் அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

அவர்கள் இதுகுறித்து குடியாத்தம் தாசில்தார் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிநாதன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டபோது பூட்டு உடைக்கப்பட்ட ஒரு வகுப்பறையில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க சில நாட்களுக்கு முன்பு வந்த 11 கணினிகள் மற்றும் ஒரு ஜெராக்ஸ் எந்திரம், ஒரு டெலிபோன் ஆகியவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ், தனிப்பிரிவு ஏட்டு அரிதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும்.

வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் உள்ள கண்காணிப்பு கேமரா வேலூரில் உள்ள கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட்டு, அங்கிருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அதில் பதிவாகி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் 2-க்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும், திருட்டு பொருட்களை எடுத்து செல்வதற்கு கண்டிப்பாக ஆட்டோ அல்லது வேனில் வந்து ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உடனடியாக வாக்குச்சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story