சிவகிரி அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து


சிவகிரி அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 5 Aug 2019 4:00 AM IST (Updated: 4 Aug 2019 10:49 PM IST)
t-max-icont-min-icon

சிவகிரி அருகே கரும்பு தோட்டத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சிவகிரி,

சிவகிரி அருகே வேட்டுவபாளையம் சுண்டக்காரன்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் அப்புகுட்டி என்கிற வெங்கடாசலம். விவசாயி. இவரது வீட்டையொட்டி கரும்பு தோட்டம் உள்ளது. இங்கு அவர் 5 ஏக்கர் பரப்பளவில் கரும்புகளை சாகுபடி செய்து உள்ளார். அவரது தோட்டத்துக்கு அருகே தனசேகர் என்பவரும் கரும்பு பயிரிட்டு உள்ளார்.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் திடீரென வெங்கடாசலத்தின் தோட்டத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. காற்றின் வேகத்தில் மளமளவென பரவிய தீ அருகே இருந்த தனசேகர் தோட்டத்திலும் பிடித்தது. இதனால் கொளுந்துவிட்டு எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பம்புசெட் கிணற்றில் இருந்து குழாய்மூலம் தண்ணீரை பீய்ச்சியடித்து தோட்டங்களில் எரிந்த தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால் முடியவில்லை.

இதைத்தொடர்ந்து கொடுமுடி, மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைக்க போராடினார்கள். சுமார் 1½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

ஆனால் இந்த தீ விபத்தில் வெங்கடாசலம் தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவிலும், தனசேகர் தோட்டத்தில் 1 ஏக்கர் பரப்பளவிலும் கரும்புகள் எரிந்து நாசம் ஆனது. இதன் சேத மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. தோட்டங்களுக்கு மேலே மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் காற்றுஅடிக்கும்போது மின்கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு தீப்பொறி விழுந்ததால் தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Next Story