கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு வடகர்நாடகத்தில் 5 மாவட்டங்கள் நீரில் தத்தளிப்பு மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள்


கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு வடகர்நாடகத்தில் 5 மாவட்டங்கள் நீரில் தத்தளிப்பு மீட்பு பணிகளில் ராணுவ வீரர்கள்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 4 Aug 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வடகர்நாடகத்தில் 5 மாவட்டங்கள் நீரில் தத்தளிக் கிறது. அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட ராணுவ வீரர்கள் வந்துள்ளனர்.

பெங்களூரு, 

மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கர்நாடகத்தில் பாய்ந்தோடும் கிருஷ்ணா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்

இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, விஜயாப்புரா, ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில் பெலகாவி, விஜயாப்புரா, பாகல்கோட்டை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கிறது.

குறிப்பாக பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகாவில் ஏராளமான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த கிராமங்களில் வசிப்பவர்களை மீட்கும் பணிகள் கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. படகுகள் மூலமாக கிராம மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், தீயணைப்பு படைவீரர்கள், போலீசார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கிராமங்களில் கஞ்சி தொட்டிகளும் திறக்கப்பட்டுள்ளன. சாலைகள் துண்டிப்பு, மேம்பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் ஏராளமான கிராமங்கள் தீவு போல மாறியுள்ளன.

மீட்பு பணியில் ராணுவ வீரர்கள்

கிருஷ்ணா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் சிக்கோடி தாலுகாவில் சிறிய அளவிலான 25 மேம்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதனால் அந்த கிராமங்கள் சாலை வசதி இல்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. சிக்கோடி தாலுகாவில் மட்டும் 8 கிராமங்களில் நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு படையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 100 ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் இரவு சிக்கோடிக்கு வந்துள்ளனர். அவர்கள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் சேர்ந்து நேற்று கிராம மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே சிக்கோடியில் முகாமிட்டு பெலகாவி மாவட்ட கலெக்டர் எஸ்.பி.பொம்மனஹள்ளி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணா ஆற்றில் வினாடிக்கு 3 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா ஆற்றையொட்டிய கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் கிராம மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிக்கோடி தாலுகாவில் மட்டும் 41 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்கு மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்ள சிக்கோடி தாலுகாவுக்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 2 படையினர் வந்துள்ளனர். கிராம மக்களை மீட்கும் பணியில் 25 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில் தண்டவாளங்கள் சேதம்

கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றையொட்டி உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெலகாவி மாவட்டம் சிக்கோடி மெயின் ரோட்டில் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் பெரிய பள்ளம் உருவானது. இதனால் சாலை போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் பெலகாவி மாவட்டம் கானாப்பூரில் பலத்த மழைக்கு ரெயில் தண்டவாளங்களும் பெயர்ந்து சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ரெயில் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. 100-க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர்.

26 வழிபாட்டு தலங்கள் மூழ்கின

தண்ணீரில் தத்தளிக்கும் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட பொதுமக்கள் பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கர்நாடகம், ஆந்திராவை சேர்ந்தவர்கள் என 1000-க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று மட்டும் பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் பச்சிளம் குழந்தை, தாய் உள்பட 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர். அதுபோல் பெலகாவி அதானியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து 12 குடும்பத்தினரும் மீட்கப்பட்டனர். பெலகாவி மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையோரத்தில் உள்ள 19 கோவில்கள், 7 மசூதிகள் என மொத்தம் 26 வழிபாட்டுதலங்கள் நீரில் மூழ்கிவிட்டன.

எடியூரப்பா இன்று பார்வையிடுகிறார்

இந்த நிலையில், கிருஷ்ணா ஆற்றில் வெள்ள பெருக்கு, பாகல்கோட்டை, யாதகிரி, விஜயாப்புரா மாவட்டங்களில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (திங்கட்கிழமை) ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார். இதற்காக இன்று காலை 9 மணியளவில் பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் பல்லாரி மாவட்டத்திற்கு எடியூரப்பா செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விஜயாப்புரா, பாகல்கோட்டை, யாதகிரி, ராய்ச்சூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் மழையால் பாதித்த பகுதிகளை எடியூரப்பா பார்வையிடுகிறார்.

அதன்பிறகு, ஹெலிகாப்டர் மூலம் பல்லாரிக்கு செல்லும் எடியூரப்பா, அங்கிருந்து பெங்களூருவுக்கு திரும்ப உள்ளார். ஆனால் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள பெலகாவி மாவட்டத்திற்கு முதல்-மந்திரி எடியூரப்பா செல்லவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மந்திரிசபை விரிவாக்கம் தொடர்பாக டெல்லிக்கு செல்வதால் பெலகாவிக்கு எடியூரப்பா செல்வதை தவிர்த்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Next Story