தண்ணீர் குடிக்க வந்த போது தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாசப்போராட்டம்


தண்ணீர் குடிக்க வந்த போது தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டியை மீட்க தாய் யானை பாசப்போராட்டம்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 4 Aug 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே தண்ணீர் குடிக்க வந்த போது தொட்டிக்குள் தவறி விழுந்த குட்டி யானையை தாய் யானை நீண்ட பாசப்போராட்டத்துக்கு பிறகு மீட்டு சென்றது.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டது தொளுவபெட்டா காப்புக்காடு. இந்த பகுதியில் யானைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது வறட்சி காரணமாக வனப்பகுதியில் உள்ள யானைகள், மான்கள் ஆகியவை தண்ணீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருகின்றன.

இந்த நிலையில் தொளுவபெட்டா கிராமத்தின் அருகில் மாதேஸ்வரன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் அவர்களின் தாகம் தீர்ப்பதற்காக கோவில் அருகில் நீரை சேமித்து வைக்கும் வகையில் பெரிய தண்ணீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை 3 மணிக்கு யானை கூட்டம் ஒன்று அந்த வழியாக வந்தது.

தொட்டியை பார்த்ததும் யானைகள் அங்கு சென்று தண்ணீர் குடித்தன. அப்போது 3 மாத குட்டி யானை ஒன்று தொட்டியின் பக்கவாட்டில் உள்ள சுவரில் ஏறி, தண்ணீர் குடிக்க முயன்ற போது தவறி தொட்டிக்குள் விழுந்தது. தண்ணீர் தொட்டியில் குட்டி தவிப்பதை பார்த்த மற்ற யானைகள் அதை காப்பாற்ற முயன்றன. ஆனால் முடியாததால் அவைகள் சென்று விட்டன. ஆனாலும் தாய் யானை அந்த இடத்தை விட்டு செல்லாமல் அங்கேயே நின்றது.

மேலும் அந்த பகுதிக்கு வந்த பொதுமக்களையும் பிளிறியபடி விரட்டியது. எனினும் தொட்டியை உடைக்க பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனிடையே நீண்ட போராட்டத்துக்கு பிறகு தாய் யானை தனது துதிக்கையால் குட்டியை தூக்கி வெளியே கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து குட்டியை அழைத்துக் கொண்டு தாய் யானை காட்டுக்குள் சென்றது.

பொதுமக்களை தாய் யானை அருகில் விடாவிட்டாலும், அவர்கள் சற்று தூரத்தில் நின்று தாய் யானை குட்டியை மீட்டதை பார்த்துக்கொண்டிருந்தனர். குட்டியை மீட்டதும் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியை, அதன் தாய் யானை போராடி மீட்டு சென்ற பாசப்போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story