பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்தப்படுத்த நடவடிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்


பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி ஆறுகளை சுத்தப்படுத்த நடவடிக்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:45 AM IST (Updated: 5 Aug 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் கலப்பதை தடுக்க பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி ஆகிய 4 ஆறுகளை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அரசு பொருட்காட்சி தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம், 

சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவிற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனர் சங்கர் வரவேற்றார். இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அரசு பொருட்காட்சியை திறந்து வைத்து, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களுக்கு எடுத்து கூறுவதில் செய்தி, மக்கள் தொடர்பு துறை ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது. அவ்வாறு மக்கள் எளிதில் அரசின் திட்டங்களையும், அதன் பலன்களை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும் அரசு பொருட்காட்சியில் அனைத்து துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதன் முறையாக சேலத்தில் 6.8.1978 அன்று எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது இங்கு அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். அவரது திருக்கரங்களால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பொருட்காட்சியை சேலத்தில் நான் தொடங்கி வைப்பதில் மிகவும் பெருமையாக கருதுகிறேன். சேலத்தில் 36 ஆண்டுகளாக அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இதுவரை 204 அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் திருநெல்வேலி மற்றும் காஞ்சீபுரத்தில் அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

அதாவது, 204 அரசு பொருட்காட்சிகள் நடத்தியதன் மூலம் அரசுக்கு ரூ.39 கோடியே 1 லட்சத்து 18 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் அரசு பொருட்காட்சியில் 15 துறைகள் மட்டுமே அரங்குகள் அமைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மின்சார வாரியம், குடிநீர் வழங்கல் துறை, மாநகராட்சி, ஆவின் என அரசு சார்ந்த துறைகள் என மொத்தம் 27 துறைகள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் முக்கிய திருவிழா நாட்களில் இதுபோன்ற அரசு பொருட்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியில் எதையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சியினர் குறைகளை கூறி வருகிறார்கள். மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். சேலத்தில் நடக்கும் இந்த விழாவின் மூலம் ரூ.13.40 கோடியில் முடிவுற்ற 19 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர, பல்வேறு துறைகள் மூலம் 11 ஆயிரத்து 571 பயனாளிகளுக்கு ரூ.17.96 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவே இந்த ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு ஒரு உதாரணம். ஆகையால் எதிர்க்கட்சியினர் வேண்டும் என்றே எதையும் செய்யவில்லை என்று பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து திட்டங்கள் மட்டுமின்றி அறிவிக்கப்படாத திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

சேலம் மாநகரில் உள்ள திருமணிமுத்தாறு நாமக்கல் மாவட்ட எல்லை வரையிலும் செல்கிறது. இந்த திருமணிமுத்தாற்றில் ஆங்காங்கே கழிவுநீர் கலப்பதால் ஏரியில் உள்ள நீர் மாசு அடைந்து வருவதாக பல்வேறு தரப்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவற்றை தடுப்பதற்காக அணைமேடு, வெள்ளக்குட்டை, மான் குட்டை, வண்டிப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ.263 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சேலம் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேட்டூர் உபரிநீரை மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்துக்கு ரூ.565 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோல், காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கடுமையாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மத்திய அரசு அந்த திட்டத்துக்கு விரிவான அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கி உள்ளது. காவிரி-கோதாவரி ஆறுகள் இணைக்கப்பட்டால் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். இதனால் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

கங்கை நதியில் கலக்கின்ற மாசுநீரை தடுத்து, அதனை தூய்மைப்படுத்தி புனித நீராக மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதேபோல், காவிரி நீரையும் புனித நீராக சுத்தப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். அதற்கு அவரும் காவிரி நீரை சுத்தப்படுத்தி புனித நீராக மாற்றப்படும் என்று உறுதியளித்தார். அதேபோல், தமிழகத்தில் பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி ஆகிய 4 ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து சுத்தப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இதனால் மழைநீரை சேமித்து வைக்க வேண்டும். அதை கருத்தில் கொண்டு குடிமராமத்து திட்டம் தொடங்கி ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2017-ம் ஆண்டில் 1519 ஏரிகளில் தூர்வாரும் பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அதன்பிறகு 1511 ஏரிகள், குளங்களை தூர்வார ரூ.308 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 2018-2019 ஆண்டில் ரூ.500 கோடியில் மேலும் 1829 ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புற ஏரிகளையும் தூர்வார வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததால் தற்போது அதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீர்வள ஆதார இயக்கம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளை தூர்வாரும் பணிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் மஞ்சாங்காரணி ஊராட்சியில் முதன்முதலாக வருகிற 7-ந் தேதி நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 3 சட்டக்கல்லூரிகள் தொடங்க ஆணையிடப்பட்டுள்ளது. அதாவது, சேலத்தில் புதிதாக சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்று வக்கீல்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று வருகிற 14-ந் தேதிக்குள் புதிய சட்டக்கல்லூரி தொடங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். சேலத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் மேம்பாலங்களாக காட்சியளிக்கிறது.

ஏற்கனவே, ஏ.வி.ஆர்.ரவுண்டானா முதல் ராமகிருஷ்ணா சாலை வரையிலும் உயர்மட்டம் மேம்பாலத்தை நான் தொடங்கி வைத்துள்ளேன். தற்போது குரங்குசாவடியில் இருந்து 4 ரோடு வரையிலும் மிக வேகமாக ஈரடுக்கு மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளும் விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். மேலும் அங்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் சயனநிலையில் இருந்த அத்திவரதரை தரிசனம் செய்தார்.

விழாவில் கலெக்டர் ராமன் உள்பட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

Next Story