நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று சித்தராமையா எப்போது ராஜினாமா செய்வார்? எச்.விஸ்வநாத் கேள்வி
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று சித்தராமையா தனது கட்சிப் பதவியை எப்போது ராஜினாமா செய்வார்? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
மைசூரு,
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று சித்தராமையா தனது கட்சிப் பதவியை எப்போது ராஜினாமா செய்வார்? என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் படுதோல்வி
மைசூருவில் நேற்று எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எச்.விஸ்வநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதேபோல் கர்நாடகத்திலும் காங்கிரஸ் - ஜனதா தளம்(எஸ்) கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றன. அந்த சந்தர்ப்பத்தில் நான் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று நான் எனது மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.
அதேபோல் தேசிய அளவில் காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஆனால் சித்தராமையா இன்னும் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர் எப்போது தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வார் என்று தெரியவில்லை.
ராஜினாமா செய்ய வேண்டும்
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் சித்தராமையா நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று உடனடியாக தனது கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். துமகூருவில் தேவேகவுடா தோல்வி அடைந்ததற்கு சித்தராமையாதான் காரணம்.
இதுமட்டுமல்லாமல் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருக்கும் முன்னாள் மந்திரியான சா.ரா.மகேஷ் விஷமி ஆவார். அவர் எந்த நிமிடம் வேண்டுமானாலும் கட்சிக்கு எதிராக செயல்பட வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு எச்.விஸ்வநாத் கூறினார்.
Related Tags :
Next Story