கீழ்வேளூரில் அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட கோரிக்கை


கீழ்வேளூரில் அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட கோரிக்கை
x
தினத்தந்தி 4 Aug 2019 10:45 PM GMT (Updated: 4 Aug 2019 6:56 PM GMT)

கீழ்வேளூரில் அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்வேளூர்,

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரெயில் நிலையம் வழியாக காரைக்காலில் இருந்து தஞ்சை மற்றும் திருச்சிக்கு பயணிகள் ரெயில், விரைவு ரெயில்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. அதேபோல தஞ்சை மார்க்கத்தில் இருந்து கீழ்வேளூர் வழியாக நாகை, காரைக்காலுக்கு ரெயில்கள் செல்கின்றன. கீழ்வேளூரில் இருந்து தேவூர், கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டிக்கு நாள்தோறும் அரசு பஸ் மற்றும் தனியார் பஸ்கள், ஏராளமான வாகனங்கள் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், விவசாய தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் கீழ்வேளூருக்கு வந்து, அங்கிருந்து பஸ் ஏறி நாகை, திருவாரூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் காரைக்கால் மேலவாஞ்சூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் துறைமுகத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நிலக்கரி ஏற்றி கொண்டு சரக்கு ரெயில்களும், எதிர் பகுதியில் இருந்து காரைக்காலுக்கு காலி சரக்கு ரெயில்களும் வந்து போகின்றன.

இதனால் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. பொதுவாக ரெயில்கள் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு, அதன் பின்னர் ரெயில்வே கேட் மூடப்பட வேண்டும். ஆனால் கீழ்வேளூரில் எச்சரிக்கை மணி அடித்தவாறே ரெயில்வே கேட் மூடப்படுகிறது.

இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் ரெயில்வே கேட் எப்போது மூடப்படும், திறக்கப்படும் என்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெரிசலில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். அவசர காலங்களில் செல்லும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட துறையினர் போக்குவரத்தை முறைப்படுத்தி ரெயில்வே கேட் மூடுவதற்கு குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு முன்பு எச்சரிக்கை மணி ஒலிக்க செய்ய வேண்டும் எனவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கீழ்வேளூர் ரெயில்வே கேட் அருகே மேம்பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story