மழைவெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் நிலையில் முதல்-மந்திரி சுற்றுப்பயணம் செய்கிறார் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


மழைவெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் நிலையில் முதல்-மந்திரி சுற்றுப்பயணம் செய்கிறார் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 5 Aug 2019 4:00 AM IST (Updated: 5 Aug 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

மழைவெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சுற்றுப்பயணம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

மும்பை, 

மழைவெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கும் நிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சுற்றுப்பயணம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தொடரும் மழை

மராட்டியத்தில் கடந்த 2 தினங்களாக இடைவிடாது மழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக மும்பை, தானே, பால்கர், நாசிக் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது.

இந்தநிலையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ரத யாத்திரை மூலம் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் பிரசாரக்குழு தலைவர் நானா படோலே கூறியதாவது:-

ரத யாத்திரையில் மும்முரம்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உடனடியாக முன்வந்து நிவாரண நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் நாங்கள் மக்களுடன் இணைந்து பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

மும்பை, தானே, பால்கர், நவிமும்பை, ராய்காட், நாசிக், சாங்கிலி, கோலாப்பூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் தொடர் மழையின் காரணமாக வெள்ளத்தில் சிக்கி தத்தளித்து வருகின்றனர். ஆனால் மாநில அரசோ முதல்-மந்திரியின் ரத யாத்திரையை கவனித்துக்கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

மழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் முதல்-மந்திரி தனது ரத யாத்திரையை தொடர்ந்து நடத்துவது உணர்ச்சியற்ற செயலாகும்.

அரசு மராட்டிய பெருமழையை தேசிய பேரிடராக அறிவித்து, தேசிய பேரிடர் நிதியில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் ரதயாத்திரைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

Next Story