நாமக்கல்லில் இருந்து 147 டன் மக்காத குப்பைகள் அரியலூருக்கு அனுப்பிவைப்பு
நாமக்கல் நகராட்சியில் இருந்து கடந்த 2 மாதங்களில் 147 டன் மக்காத குப்பைகள் அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு உற்பத்தி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கொசவம்பட்டியில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு உள்ளன. இவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு மக்கும் குப்பைகளை தனியார் நிறுவனம் மறுசுழற்சி செய்து இரும்பு பொருட்கள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களாக மாற்றி வருகிறது.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் தினசரி 3 முதல் 3½ டன் வரை மக்காத குப்பைகள் (பிளாஸ்டிக், டயர், ஆயில்கேன்) சேகரமாகிறது. இந்த குப்பைகளை எப்படி அழிப்பது என புரியாமல் நகராட்சி அலுவலர்கள் தவித்து வந்தனர். இதற்கிடையே மக்காத குப்பை கழிவுகளை அரசுக்கு சொந்தமான பேப்பர் தயாரிக்கும் நிறுவனங்களும் வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு, அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு உற்பத்தி ஆலைக்கு மக்காத குப்பைகளை அனுப்பி வருகின்றனர். 2 நாட்களுக்கு ஒருமுறை இந்த குப்பைகள் நகராட்சிக்கு சொந்தமான வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகின்றன.
இது குறித்து நகராட்சி பணியாளர்கள் கூறுகையில், நாமக்கல் நகராட்சியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுகிறது. இவற்றில் மக்காத குப்பைகள் தினசரி சாக்குகளில் கட்டி வைக்கப்படுகின்றன. அவை 2 நாட்களுக்கு ஒருமுறை 7 டன் வீதம் அரியலூர் தனியார் சிமெண்டு உற்பத்தி ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த 2 மாதங்களில் 147 டன் மக்காத குப்பைகள் அரியலூர் சிமெண்டு உற்பத்தி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று கூறினர்.
Related Tags :
Next Story