மசினகுடி அருகே, ஆற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
மசினகுடி அருகே ஆற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
மசினகுடி,
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர்கள் கணேஷ்(வயது 42), கார்த்திக்(32), சுரேஷ்(34), திலீப்(32), சரவணன்(31). இவர்கள் 5 பேரும் நகை தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கணேஷ் உள்பட 5 பேரும் மசினகுடியை சுற்றி பார்க்க காரில் வந்தனர். இரவு அங்குள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.
பின்னர் நேற்று காலை மசினகுடியில் இருந்து சிங்காரா செல்லும் சாலையோரத்தில் உள்ள கல்லல்லா ஆற்றை காண காரில் சென்றனர். காரை சுரேஷ் ஓட்டினார். அங்கு கல்லல்லா ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் சென்றபோது, திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
பின்னர் தடுப்புச்சுவர் இல்லாத அந்த பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கார் கவிழ்ந்தது. இதில் காருக்குள் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்து, கூச்சலிட்டனர். உடனே அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story