அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு, கண்காணிப்பு கேமராவில் சிக்கிய வாலிபர் - போலீசார் தீவிர விசாரணை
அடுத்தடுத்து 2 வீடுகளில் திருடிச்சென்ற வாலிபர் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னாளபட்டி,
சின்னாளபட்டி அருகே உள்ள செட்டியபட்டி அக்ஷயா நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் சேசுராஜ். தனியார் நிறுவன ஊழியர். இவரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் பாஸ்கரன். இவர், திண்டுக்கல் பாரத ஸ்டேட் வங்கியில் ஊழியராக பணிபுரிகிறார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி இவர்கள் வழக்கம் போல் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர்.
பின்னர் மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது 2 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. மேலும் 2 பேரின் வீடுகளில் இருந்தும் மொத்தம் 20 பவுன் நகைகள் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், அந்த வீட்டின் நுழைவு வாயில் கேட் மீது ஏறி குதிப்பதும், பின்னர் அங்கு பதுங்கியபடி வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், நீண்ட நேரம் கழித்து கையில் பையுடன் வந்து பக்கத்து வீட்டை நோக்கி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து அந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு 2 வீடுகளில் கைவரிசை காட்டிச்சென்ற வாலிபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கொள்ளை நடந்த ஒரு வீட்டுக்குள் அந்த வாலிபர் செல்லும் வீடியோ காட்சிகள் ‘வாட்ஸ்-அப்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story