தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2019 3:00 AM IST (Updated: 5 Aug 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டம்

கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் பசுந்தீவனம் குறைவில்லாமல் கிடைப்பதற்கு ஏதுவாகவும், கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான பசுந்தீவனத்தை தாங்களே உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழக அரசு மாநில தீவனப்பயிர் அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நடப்பு ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மானியத்துடன் தீவனச்சோளம், மக்காச்சோளம், வேலிமசால், அகத்தி மரக்கன்றுகள் 78 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட உள்ளது. குறைந்தபட்சம் 10 சென்ட் நிலத்துக்கு மானியமாக ரூ.550 வழங்கப்படும். நீர் பாசனவசதி ஆண்டு முழுவதும் இருக்கும்பட்சத்தில் அதிகபட்சமாக 1 ஏக்கர் வரை மானியம் வழங்கப்படும்.

மானாவாரியில் 1000 ஏக்கர் பரப்பில் தீவனச்சோளம் மற்றும் தட்டைப்பயிறு சாகுபடி செய்வதற்கு, 0.25 ஏக்கருக்கு 3 கிலோ தீவனச்சோளம் மற்றும் 1 கிலோ தட்டைப்பயிறு விதைகள் 100 சதவீதம் மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை ஒருபயனாளிக்கு தீவன விதைகள் மானியமாக வழங்கப்படும்.

முன்னுரிமை

இந்த திட்டத்துக்கு இலவச கறவைப்பசு வழங்கும் திட்ட பயனாளிகள், சிறு, குறு விவசாயிகள், ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்த திட்டத்தில் ஏற்கனவே பயனடைந்தவர்கள் தற்போது பயன்பெற முடியாது. பயிரிடப்படும் நிலம் சொந்தமாகவோ, குத்தகையாகவோ வைத்திருக்க வேண்டும். 2 முதல் 5 கால்நடைகள் வளர்ப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

எனவே இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story