ராஜபாளையத்தில் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை


ராஜபாளையத்தில் கட்டிட தொழிலாளி குத்திக்கொலை
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 5 Aug 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையத்தில் கட்டிட தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்டார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் துரைசாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(வயது 30). இவருக்கு சீனித்தங்கம் என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான இவர், அடிக்கடி குடித்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த 2-ந் தேதி இரவு 9 மணியளவில் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. மாயமான அவரை கண்டுபிடித்து தரக்கோரி உறவினர்கள் போலீசில் புகார் அளித்து இருந்தனர். மேலும் அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று பால்ராஜின் சகோதரர் இசக்கிமுத்து, கருங்குளம் பகுதியில் தனது தம்பியை தேடி பார்த்துள்ளார். அப்போது விவசாய நிலத்தில் பால்ராஜின் இருசக்கர வாகனம் நிற்பது தெரியவந்தது. அவர் அருகே சென்று பார்த்தபோது இருசக்கர வாகனத்தின் அருகே பால்ராஜ் பிணமாக கிடந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இசக்கிமுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் தெற்கு போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பிணமாக கிடந்த பால்ராஜின் தலையில் காயமும், உடலில் கத்திக்குத்து காயங்களும் காணப்பட்டன. தகவல் அறிந்ததும் பால்ராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு காணப்பட்டது. மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் அந்த பகுதியில் சிறிதுதூரம் ஓடிவிட்டு திரும்பி வந்தது. இந்த கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story