புதிய கல்விக்கொள்கை, 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் நாராயணசாமி ஆலோசனை


புதிய கல்விக்கொள்கை, 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் நாராயணசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 4 Aug 2019 11:30 PM GMT (Updated: 4 Aug 2019 11:12 PM GMT)

புதிய கல்விக்கொள்கை, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முற்பட்ட சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் தலைமைச்செயலாளர் அஸ்வனி குமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் நீல.கங்காதரன், தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், முன்னாள் செயலாளர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், முன்னாள் செயலாளர்கள் முருகன், பெருமாள், ராஷ்டிரீய ஜனதா தள மாநில தலைவர் சஞ்சீவி, மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் ராஜன், செயலாளர் முருகேசன், விடுதலை சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவ பொழிலன், ம.தி.மு.க. செயலாளர் கபிரியேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.

இதில் பங்கேற்ற பா.ஜ.க. நிர்வாகிகளை தவிர அனைத்து கட்சியினரும், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை புதுச்சேரியில் அமல்படுத்த கூடாது என்றே வலியுறுத்தினர். மேலும் ஏற்கனவே சென்டாக் உள்ளிட்டவைகளில் அமல்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் அவர்கள் தங்கள் கருத்தை கோரிக்கை மனுவாகவும் அளித்தனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கு, மாநில அரசு தனது கருத்துக்களை அனுப்புவதற்கு முன்பாக இந்த அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது. இதில், புதிய கல்விக் கொள்கையை பொருத்தவரையில், எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியான புதிய கல்விக் கொள்ளையை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாக இருக்காது. மாநிலத்துக்கு மாநிலம் கல்வியின் திட்டங்கள் மாறுகின்றன. அதற்கு ஏற்றார் போல் கல்விக் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். அது சம்பந்தமாக புதுச்சேரி அரசு தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்று அதிகப்படியான அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறினர்.

மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை பொருத்த வரையில், புதுச்சேரி மாநிலத்தில் மேல்சாதியினர் எத்தனை பேர், அதில் எவ்வளவு பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்பதை முதலில் மாநில அரசு கணக்கெடுக்க வேண்டும். அதன்பிறகு 10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கான சூழல் உருவாகும். எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் நடைமுறைப்படுத்துவது என்பது மற்றவர்களுக்கு உள்ள உரிமையை பறிப்பதாக இருக்கும் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக இன்னும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள், பெற்றோர், மாணவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளோம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்படும். அதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக தெரிவிப்போம். புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அது தொடர்பாக பேசி முடிவு செய்யும்போது, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை சேர்த்து கணக்கு எடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Next Story