குடிநீரை நிறுத்திய என்.எல்.சி.யை கண்டித்து, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - அடுத்தடுத்த போராட்டங்களால் மந்தாரக்குப்பத்தில் பரபரப்பு


குடிநீரை நிறுத்திய என்.எல்.சி.யை கண்டித்து, காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - அடுத்தடுத்த போராட்டங்களால் மந்தாரக்குப்பத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Aug 2019 10:30 PM GMT (Updated: 4 Aug 2019 11:17 PM GMT)

குடிநீரை நிறுத்திய என்.எல்.சி.யை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மந்தாரக்குப்பத்தில் அடுத்தடுத்து நடந்த போராட்டங்களால் பரபரப்பு நிலவியது.

மந்தாரக்குப்பம்,

மந்தாரக்குப்பம் அருகே உள்ள வடக்கு வெள்ளூர் ஊராட்சி, கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளுக்கு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீரை சுத்திகரிப்பு செய்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதில் தினசரி காலை, மதியம், மாலை என்று 3 வேளைகளில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு மதிய நேரத்தில் வழங்கப்பட்ட குடிநீர் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக காலை, மாலை நேரங்களில் வழங்கி வந்த தண்ணீரையும் என்.எல்.சி. நிர்வாகம் நிறுத்திவிட்டது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட என்.எல்.சி. அதிகாரிகளிடம் முறையிட கிராம மக்கள் முயற்சி செய்தும் பலன் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த வடக்குவெள்ளூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மந்தாரக்குப்பத்தில் இருந்து நெய்வேலி செல்லும் சாலையில வடக்கு வெள்ளூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை 7.30 மணிக்கு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாரிகள் யாரும் இல்லை, எனவே நாளை(அதாவது இன்று) கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று சமாதானம் செய்தனர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

இந்த சூழ்நிலையில் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர்கள் மந்தாரக்குப்பத்தில் சுரங்கம் -2 முன்பு கடலூர்-விருத்தாசலம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து வடக்குவெள்ளூரில் இருந்த போலீசார் உடனடியாக மந்தாரக்குப்பத்திற்கு வந்து, அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீசாருக்கும் பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து போலீசார் என்.எல்.சி. அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் ஓம்சக்தி நகர், வடக்குவெள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தங்கள் பகுதிக்கு குடிநீர் வந்ததை உறுதி செய்த பின்னர் இவ்விரு இடங்களிலும் மறியலில் ஈடுபட்டவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மந்தாரக்குப்பத்தில் அடுத்தடுத்து நடந்த மறியல் போராட்டங்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story