ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் ஊராட்சியில் தி.அணைக் கரைப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் வைகை அணை-சேடப்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கிராமத்திற்கு வரும் தண்ணீரை அந்த பகுதியை சேர்ந்த பலர் திருட்டுத்தனமாக குழாய் அமைத்து குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
குறிப்பாக கடந்த ஒரு மாதமாக தி.அணைக்கரைப்பட்டி கிராமத்திற்கு குடிநீர் வரவே இல்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். குடிநீர் கேட்டு கிராம மக்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் தி.அணைக்கரைப்பட்டியில் ஆண்டிப்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் காலிக்குடங்களுடன் திரண்டு வந்தனர். பின்பு அவர்கள் குடிநீர் கேட்டு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், குடிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினர். இன்னும் ஓரிரு நாட்களில் கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யவில்லையென்றால், தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட போவதாக பொதுமக்கள் அறிவித்தனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஆண்டிப்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story