தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
கடலூர்,
தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 27-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் போது கடலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து வருகிற 31-ந்தேதிக்குள் இணைய தளம் அல்லது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வோர் வெடி மருந்து சட்டம் மற்றும் விதிகளை முறையாக கடைபிடித்து பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து, ஆட்சேபனை இல்லாத இடத்துக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய காலங்களில் தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் தற்போது விண்ணப்பத்துடன் அப்போது பெற்ற உரிம நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் போது, கடையின் வரைபடம்-6, உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல், (அசல் மற்றும் 5 நகல்), உரிமம் கோரும் இடம் வாடகை கட்டிடம் என்றால், கட்டிட உரிமையாளரிடம் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், ரூ.500-க்கான கருவூல அசல் ரசீது, வீட்டு முகவரிக்கான ஆதாரம், நடப்பு நிதி ஆண்டின் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு கொண்ட புகைப்படம்-2 ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அரசு உத்தரவுபடி வருகிற 31-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 31-ந்தேதிக்கு பிறகு விண்ணப்பிக்கும், விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரருக்கு, தற்காலிக பட்டாசு (இருப்பு மற்றும் விற்பனை) உரிமம் வழங்கப்படும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story