வால்பாறையில் நள்ளிரவில் அட்டகாசம், தோட்ட தொழிலாளர் வீடுகள்- அலுவலகத்தை சேதப்படுத்திய காட்டுயானைகள்


வால்பாறையில் நள்ளிரவில் அட்டகாசம், தோட்ட தொழிலாளர் வீடுகள்- அலுவலகத்தை சேதப்படுத்திய காட்டுயானைகள்
x
தினத்தந்தி 5 Aug 2019 4:30 AM IST (Updated: 5 Aug 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் நள்ளிரவில் தொழிலாளர்களின் வீடுகளையும் தோட்ட அலுவலகத்தையும் இடித்து காட்டுயானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டன.

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள சிங்கோனா எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நள்ளிரவு 2.30 மணிக்கு 4 குட்டிகள் உட்பட 12 காட்டுயானைகள் புகுந்தன. பாக்கியம்மாள், நடராஜ் ஆகியோரது வீடுகளின் சமையலறை ஜன்னல், கதவுகளை சுவற்றுடன் சேர்த்து இடித்து தள்ளின. பின்னர் இடிந்த சுவர்களின் வழியாக துதிக்கையை உள்ளே விட்டு சமையலறையிலிருந்து உணவுப் பொருட்கள் முழுவதையும் எடுத்து தின்று, வெளியே வீசி சேதப்படுத்தின.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பாக்கியம்மாள் வீட்டின் முன்பக்க கதவை திறந்து கொண்டு அருகில் உள்ள வீட்டுக்குள் ஓடிவிட்டார். பின்னர் மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து விட்டு, தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காட்டுயானைகளை விரட்டினர்.

இதனால் காட்டுயானைகள் அதிகாலை 3.30 மணிக்கு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றன. பின்னர் வந்த வனத்துறையினர் காட்டுயானைகள் மீண்டும் குடியிருப்புக்குள் நுழைந்து விடாமல் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்த யானைகள் கூட்டம் சிங்கோனா எஸ்டேட் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னால் உபாசி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தோட்ட அலுவலகத்தின் ஜன்னலை உடைத்தன. துதிக்கையை உள்ளே விட்டு உள்ளிருந்த அலுவலக பொருட்களை உடைத்து சேதப்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றும் இந்த யானைகள் கூட்டம் சிங்கோனா பகுதியில் தொடர்ந்து முகாமிட்டு வருவதால் எஸ்டேட் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.

Next Story