சிவகாசி அச்சகங்களில் 2020–ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு தீவிரம்; 7 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு
சிவகாசி அச்சகங்களில் 2020–ம் ஆண்டுக்கான காலண்டர் தயாரிப்பு பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது. காலண்டர் விலை 7 சதவீதம் விலை உயர வாய்ப்பிருப்பதாக உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சிவகாசி,
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அடுத்த ஆண்டுக்குரிய காலண்டர் தயாரிப்பு தொடங்கும். ஆடிப்பெருக்கு அன்று வெளி மாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு அந்த ஆண்டுக்குரிய புதிய டிசைன் காலண்டர்கள் பார்வைக்கு வழங்கப்படும்.
இதை பெற்றுக்கொள்ளும் மொத்த வியாபாரிகள் புதிய ஆர்டர்களை சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு வழங்குவது வழக்கம். சிவகாசி பகுதியில் தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணியில் 50–க்கும் மேற்பட்ட அச்சகங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் 2020–ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் கற்பகா ஜெயசங்கர் கூறியதாவது:–
2020–ம் ஆண்டுக்கான தினசரி காலண்டர்கள் பல்வேறு அளவுகளில் தயாரித்து மொத்த விற்பனையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாத காலண்டர்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15–ந்தேதி வரை நடக்கும்.
நாங்கள் ரூ.15 முதல் இருந்து ரூ.2,000 வரை விலையுள்ள காலண்டர்கள் தயாரித்து வருகிறோம். கடந்த ஆண்டு மூலப்பொருள் விலையேற்றம், கூலி உயர்வு போன்ற காரணங்களால் 5 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டும் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை விலை உயர்வு இருக்கும்.
தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை. அதேபோல் மின் வினியோக பாதிப்பும் இல்லை. இதனால் இந்த ஆண்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் காலண்டர் தயாரிப்பு பணி தீவிரமாகி உள்ளது. தற்போது ஆர்டர் கொடுக்கும் மொத்த வியாபாரிகளுக்கு தீபாவளிக்கு முன்பு காலண்டர்கள் வினியோகம் செய்ய முடியும். வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் காலண்டர் மோகம் அதிகம் இருப்பதற்கு காரணம் ஆண்டு முழுவதும் அந்த நிறுவனத்தின் விளம்பரத்தை தாங்கி இருப்பதால் தான்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு காலண்டர் ஆர்டர் அதிக அளவில் இருக்கும். கடவுள் படத்துடன் கூடிய காலண்டர்களுக்கு அதிக அளவில் ஆர்டர் வரும். அரசியல் தலைவர்கள், தேச தலைவர்கள் படத்துடன் கூடிய காலண்டர்களுக்கும் மவுசு அதிகம். 3–டி தொழில்நுட்பத்துடன் கூடிய காலண்டர்களும் நாங்கள் தயாரித்து தருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.