பெசன்ட் நகரில் போலீஸ் போல் நடித்து வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது


பெசன்ட் நகரில் போலீஸ் போல் நடித்து வாலிபரை மிரட்டி பணம் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 5 Aug 2019 10:45 PM GMT (Updated: 5 Aug 2019 6:38 PM GMT)

பெசன்ட் நகரில் போலீஸ் போல் நடித்து வாலிபரை மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்தனர்.

அடையாறு,

சென்னையை அடுத்த பெருங்குடியை சேர்ந்தவர் யுவராஜ்(வயது 23). இவர், பெசன்ட் நகர் 4-வது அவென்யூ வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது யுவராஜை வழிமறித்த மர்மநபர் ஒருவர், தான் போலீஸ் எனக்கூறி அவரை மிரட்டி 500 ரூபாயை பறித்துக் கொண்டு விரட்டியடித்தார்.

முகத்தில் தாடியுடன் இருந்த அந்த நபரின் உருவத்தை பார்த்து சந்தேகமடைந்த யுவராஜ், இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் கூறிய அடையாளங்களை வைத்து அவர் அந்த போலீஸ் நிலைய போலீஸ் இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

போலீஸ் போல் நடித்து...

இதையடுத்து, இன்ஸ்பெக் டர் பலவேசம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விமலா, போலீஸ்காரர் கிறிஸ்டோபர், ரேவேந்திரன் ஆகியோர் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு சாலையோரம் நின்றிருந்த அந்த மர்மநபர் போலீசார் வருவதை கண்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் போலீசார் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

விசாரணையில் அவர், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஜமால்(45) என்பதும், பெசன்ட்நகர் கடற்கரைக்கு வரும் இளம் காதல் ஜோடிகளிடம் தான் போலீஸ் எனவும், வழக்குப்பதிவு செய்து விடுவதாக அவர்களை மிரட்டி பணம், நகைகளை பறிப்பதை வாடிக்கையாக செய்து வந்ததும் தெரியவந்தது.

கைது

மேலும் அவர் மீது சென்னையில் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதும், கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறை சென்று சமீபத்தில்தான் விடுதலையானதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஜமாலை கைது செய்த சாஸ்திரி நகர் போலீசார், அவரிடம் இருந்த திருட்டு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான ஐமால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story