வித்தியாசமான தோற்றத்தில் வந்து கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவி


வித்தியாசமான தோற்றத்தில் வந்து கோர்ட்டில் ஆஜரான நிர்மலாதேவி
x
தினத்தந்தி 6 Aug 2019 4:45 AM IST (Updated: 6 Aug 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

நிர்மலாதேவி வித்தியாசமான தோற்றத்தில் நேற்று கோர்ட்டுக்கு வந்து ஆஜராகியது ஸ்ரீவில்லிபுத்தூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அந்த கல்லூரியின் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்ததாக மதுரை பல்கலைக்கழக பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக சிறையில் இருந்த 3 பேரும் தற்போது ஜாமீனில் வந்துள்ள நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையொட்டி நிர்மலாதேவியும், கருப்பசாமியும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். விடுமுறை மனு தாக்கல் செய்திருந்ததால் முருகன் ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி பாரி, விசாரணையை வருகிற 19–ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே கோர்ட்டுக்கு தலைவிரி கோலத்தில் வந்து பேராசிரியை நிர்மலாதேவி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நேற்றும் அவரது கோலத்தில் மாற்றம் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட தலைமுடி இல்லாமல், மொட்டை அடித்தது போல் அவரது தோற்றம் இருந்தது.

இதுகுறித்து அவர் கூறுகையில், இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு முடி காணிக்கை செலுத்தி உள்ளதாக தெரிவித்தார்.


Next Story