தொப்பூர் அருகே, மோட்டார்சைக்கிள் மோதி 2 பெண்கள் பலி
தொப்பூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நல்லம்பள்ளி,
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர்கள் சுசீலா (வயது 70), லட்சுமி (47), அமுதா (30). இவர்கள் 3 பேரும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள அஜ்ஜிப்பட்டி கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் வந்தனர். இரவு அங்கிருந்து மீண்டும் சேலம் செல்வதற்காக அவர்கள் புறப்பட்டனர்.
இந்த 3 பேரும் வெள்ளக்கல் பகுதியில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சேலம் பஸ்சில் ஏறுவதற்காக சாலையின் ஒருபகுதியில் இருந்து மறுபகுதியை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் கண் இமைக்கும் நேரத்தில் 3 பெண்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் சுசீலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் லட்சுமி, அமுதா மற்றும் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்த சுரேஷ்(30) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் 2 பெண்கள் பலியான சம்பவம் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது மோட்டார் சைக்கிள் மோதி 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story