கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் வேட்டை, பிரபல ரவுடி கொற கோபி உள்பட 20 பேர் கைது


கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் வேட்டை, பிரபல ரவுடி கொற கோபி உள்பட 20 பேர் கைது
x
தினத்தந்தி 6 Aug 2019 4:15 AM IST (Updated: 6 Aug 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடியாக வேட்டை நடத்தி பிரபல ரவுடி கொற கோபி உள்பட 20 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், மத்தூர், ஊத்தங்கரை உள்பட பல்வேறு இடங்களில் அவ்வப்போது குற்ற செயல்கள் நடந்து வந்தன. குறிப்பாக பிரபல ரவுடிகளும், ரவுடிகள் பெயரில் பலரும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தனர். இத்தகைய ரவுடிகளை பிடித்து களையெடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டத்தில் சரித்திர குற்ற பதிவேட்டில் உள்ள ரவுடிகளையும், அவர்களின் பின்னணியில் உள்ளவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தி நேற்று முன்தினம் ஒரே நாளில் கைது செய்தனர்.

அந்த வகையில் ஓசூர் பிரபல ரவுடி கொற கோபி என்கிற கோபி (வயது 48), தளி சாலை பாளையம் நரேஷ் குமார்(35), அய்யாசாமி பிள்ளை தெரு சாம்ராட் (33), வெங்கடேஷ் நகர் சுரேஷ் (28), காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெரு விக்னேஷ் (23), ஓசூர் தளி சாலை பிரவீன் குமார் (31), ஓசூர் சாந்தி நகர் ஜிலானி (34), ஊத்தங்கரை வீரியம்பட்டி கூட்டு ரோடு அண்ணாமலை (29), ஊத்தங்கரை கண்ணம்பட்டி புதூர் நாராயணன் (55), சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் சங்கர் (40) உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், கைதானவர்களில் பெரும்பாலானவர்கள் ரவுடிகள் ஆவார்கள். இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்பட பல குற்ற வழக்குகள் உள்ளன. தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இவர்கள் செயல்பட்டு வந்ததால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இதே போல ரவுடிகள் வேட்டை தொடரும் என்றனர். 

Next Story