அனைத்து மாவட்டங்களிலும் மறவர்களுக்கு ஒரே சான்றிதழ்; கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்


அனைத்து மாவட்டங்களிலும் மறவர்களுக்கு ஒரே சான்றிதழ்; கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்
x
தினத்தந்தி 6 Aug 2019 3:00 AM IST (Updated: 6 Aug 2019 1:22 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மாவட்டங்களிலும் மறவர்களுக்கும் ஒரே சாதி சான்றிதழ் கேட்டு மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடந்தது.

மதுரை,

தமிழகத்தில் உள்ள நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்பட 9 மாவட்டங்களில் உள்ள மறவர்களுக்கு மட்டும் சீர்மரபினர் வகுப்பு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. மற்ற மாவட்டங்களில் உள்ள மறவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த நிலையை மாற்றி அனைத்து மாவட்டங்களில் உள்ள மறவர்களுக்கும் சீர்மரபினர் வகுப்பு பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அரசு, சீர்மரபினர் வகுப்பை சீர்மரபினர் வகுப்பு பழங்குடியினர் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் மறவர்களுக்கு சீர்மரபினர் வகுப்பு பழங்குடியினர் என்று ஒரே சான்றிதழ் வழங்குவதற்கும் அரசாணையை வெளியிட்டது. ஆனால் இந்த அரசாணையை இன்னும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

எனவே அரசின் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் அரசாணைப்படி மறவர்களுக்கு சீர்மரபினர் வகுப்பு பழங்குடியினர் என வழங்கக்கோரி அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் அரசாணையை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை மறவர் நல கூட்டமைப்பு பொது செயலாளர் மாரிமுத்து தேவர், ஓய்வுபெற்ற மாநகராட்சி முன்னாள் முதன்மை பொறியாளர் சக்திவேல், முன்னாள் தடய அறிவியல் துறை இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்டோர் வழங்கினர்.

Next Story