36-வது நாளாக பக்தர்கள் கூட்டம்: அத்திவரதரை இதுவரை 48 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்
காஞ்சீபுரம் அத்திவரதர் 36-வது நாளான நேற்று பட்டாடை அணிவிக்கப்பட்டு, ஏலக்காய் மாலையுடன் காட்சியளித்தார். இதுவரை 48 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பூஜித்து வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிமாநில மற்றும் மாவட்டத்திலிருந்து வருகை தந்து தரிசித்துவிட்டு செல்கின்றனர். கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர், கடந்த 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) வரை அவர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து பக்தர்கள் தரிசனத்தையொட்டி, அவருக்கு தினமும் பல வண்ண உடைகள் அணிவிக்கப்பட்டும், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் வருகிறது.
வாடாமல்லி நிற பட்டாடை
36-வது நாளான நேற்று அத்திவரதருக்கு வாடாமல்லி நிறப் பட்டாடை அணிவிக்கப்பட்டது. அதோடு ஏலக்காய் மாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 5 மணியிலிருந்து கூட்டம் கூட்டமாக பக்தர்கள் கோவிலை நோக்கி படையெடுத்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலுக்கு வருகிற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
48 லட்சம் பேர் தரிசனம்
வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் சிரமமின்றி தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரபல சினிமா இசையமைப்பாளர் தேவா குடும்பத்துடன் வந்து அத்திவரதரை தரிசித்து சென்றார்.
நேற்று சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து சென்றதாக கோவில் நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 36 நாட்களாக காட்சியளித்து வரும் அத்திவரதரை காண வருகை தந்த மொத்த பக்தர்களின் எண்ணிக்கை இதுவரை 48 லட்சத்தை தாண்டியதாக அவர் கூறினார்.
Related Tags :
Next Story