மின்வாரிய ஊழியரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கைது
மின்வாரிய ஊழியரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை போலீசார் கைது செய்தனர்.
ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம் அகரத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய அண்ணன் ராஜீவ். இவர்களுக்கு சொந்தமான 1.43 ஏக்கர் நிலம் திருச்செங்கோடு அருகே உள்ள வண்டி நத்தம் என்ற பகுதியில் இருந்தது. இந்த நிலத்தை இருவரும் சேர்ந்து உறவுக்கார பெண்ணான சித்ரா என்பவருக்கு பவர் எழுதி கொடுத்தனர்.
இந்தநிலையில் அந்த நிலத்தை சின்னதம்பிக்கு தெரியாமல் ராஜீவ் போலி ஆவணம் மூலம் எலச்சிபாளையம் அருகே உள்ள பொன்னாற்றை சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கர் என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நிலத்தை ஜெய்சங்கர், பச்சிராஜா என்பவருக்கு விற்றார். இதுகுறித்து கடந்த 2009-ம் ஆண்டு சின்னதம்பிக்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 4-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவிடம் சின்னதம்பி மீண்டும் புகார் தெரிவித்தார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் நாமக்கல் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்(வயது 57) விசாரணை நடத்தினார்.
இந்த புகாரில் மின்வாரிய ஊழியர் ஜெய்சங்கரை விடுவிக்கவும், நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் அவரிடம் ராஜேந்திரன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இந்த பணத்தை கொடுக்க விரும்பாத ஜெய்சங்கர் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார்.
பின்னர் போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று இரவு ஜெய்சங்கர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட்டிற்கு வரவழைத்து கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்குமார் தலைமையிலான போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story